நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என நடிகை ஜோதிகா கூறியுள்ளார் . இதுகுறித்து நடிகை ஜோதிகா தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளதாவது , “களத்தில் போராடும் மாணவர்களுடன் துணை நிற்கிறேன். நமது தேசத்தின் எதிர்காலத்திற்கும் ஆதரவாக நிற்கிறேன்.
நான் ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கிறேன். நான் சீர்திருத்தப்பட்ட கல்விக்கு ஆதரவாக நிற்கிறேன். சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ், ஒரு தாயாக எங்கள் குழந்தைகள் உங்களைப் போல வளர வேண்டும் என்று விரும்புகிறோம்.ஜென் ஸி இளைஞர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்கு பெருமைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “நாம்தான் இந்தியா” என்பதை நிரூபித்துள்ளீர்கள். அழுத்தங்களையும் பயத்தையும் உடைத்தெறிந்ததற்கு நன்றி. எங்களை அச்சமின்றி பேசத் துணிவூட்டியதற்கு நன்றி. ஜெய் ஹிந்த்!” என்று டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.இணையத்தில் வைரலாகி வரும் இவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












