
கதாநாயகன் சிம்பு என்கிற சிலம்பரசன் வரவில்லை என்றாலும் மாநாடு திரளாக கூடியிருந்தது.
பேரறிஞர் அண்ணா இல்லாமல் அண்ணன் சம்பத்,கவியரசர் கண்ணதாசன் தனித்துக் கூட்டிய தமிழ்த் தேசியக் கட்சியின் தொடக்கநாள் கூட்டத்தைப் போல.! பெருமளவு கூட்டம்.
சிவப்பு கம்பளம் விரித்திருந்தார்கள்.
கதையின் நாயகன் சிலம்பரசன் ஏன் வரவில்லை?
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் ,உஷா ராஜேந்தர்,டி .ராஜேந்தர் இருவருக்கும் அலை வரிசை ஒத்துப்போகவில்லை அதனால் மகன் சிலம்பரசன் வரவில்லை என்றார்கள் .
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது நல்ல குடும்பஸ்தர்களுக்கு தெரியும்.
ஆனால் திரையுலக சங்கங்களுக்கும் ,டி .ஆருக்கும் இடையேயான பிணக்கு உஷா மனது வைத்தால் மட்டுமே முடிவுக்கு வரும் என்பது பட்டறிவு அனுபவசாலிகளுக்கு புரிந்ததுதான்.!
மாநாடு விழா என்ன சொல்கிறது?
சுருக்கமாக பார்க்கலாம். அத்தனை பேரின் பேச்சுகளை சுருக்கமாக போட்டாலும் நமது ‘சினிமா முரசத்தின்’ பக்கம் போதாது.
ஆகவே பிரபலங்களின் சுருக் நறுக் கருத்து மட்டும் இங்கே!
இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்து விட்டது. செத்துக்கிடக்கிற செல்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. “என்றார்
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது, “இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, சற்று பொறுங்கள்.. 25-வது நாளில் வெற்றி விழாவை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.. காரணம் இப்போது பல படங்களுக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். ஆனால் அது உண்மையான வெற்றி அல்ல.”என்று அவர்க்குரிய குத்தலுடன் நிறைவு செய்தார்.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, “இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு என்று சொல்லலாம்.. பிடித்தவர்கள் திரும்ப திரும்பப் பார்த்தார்கள்.. முதல் தடவை படம் பார்த்து புரியாதவர்கள் இரண்டாம் முறை அது என்ன என்று புரிந்து கொள்வதற்காக திரும்பவும் பார்த்தார்கள்.. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய காரணமாக அமைந்தது..”என்றார் .
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஜானரை அறிமுகப்படுத்தி உள்ளார்.”என ரசித்துப்பேசினார்.
இயக்குநர் வெங்கட்பிரபு பேசும்போது, “இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை பிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன்.. ஆனால் அந்த சமயத்தில் என்ஜிகே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன்பிறகுதான் டைம் லூப்புக்கு கதையை மாற்றினோம். இடையில் கோவிட் காரணமாக இந்த படத்தை அப்படியே வைத்துவிட்டு, இதே சிம்பு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியை வைத்து சிம்பிளாக ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.. சிம்புவும் அதற்கு ஓகே சொன்னார்.. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு அந்த கதை பிடித்திருந்தாலும், மாநாடு படத்திலிருந்து நான் டைவர்ட் ஆக வேண்டாம் முதலில் அந்த படத்தை முடிப்போம் என உறுதியாக நின்றார்”என்று மாநாடு நடந்த காரணத்தை சொன்னார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான்.. . சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன். “என்று சிம்பு அங்கு இல்லாதற்கான காரணத்தை சொன்னார்.
நன்றி அறிவிப்பு விழா “மாநாடு “மக்கள் தொடர்பாளர் ஜான் வழக்கப்படி பிரியாணியுடன் களை கட்டியது .