அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.மேலும் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள், மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், கரசேவர்களின் குடும்பத்தினர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என சுமார் 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன .இதில்,ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவரும், பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவருமான நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இதற்கான அழைப்பிதழை வழங்கி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த்,இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் இருந்து தனது மனைவி லதா ரஜினிகாந்த், அண்ணன் சத்யநாராயணா ஆகியோருடன் அயோத்தி புறப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்லும் இவர்கள் அதன்பிறகு டெல்லியில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கின்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தனது அயோத்தி பயணம் குறித்து கூறுகையில்,”500 ஆண்டு பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு மூலம் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மறக்க முடியாத நாள். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்













