திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.
இம்மாதம் பதிமூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ், கலை இயக்குநர் சுரேந்தர், நடிகர்கள் வாகை சந்திரசேகர், மிர்ச்சி சிவா, அருள்தாஸ், ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”பா ரஞ்சித் மின்னஞ்சல் அனுப்பி தயாரிப்பாளர் சி வி குமாரை கவர்ந்தார். நான் அவருக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி வாய்ப்பினை பெற்றேன். நானும் நலன் குமாரசாமியும் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட பிறகு திரைப்படங்களை உருவாக்குவதற்காக தயாரிப்பாளர்களை அணுகத் தொடங்கினோம். தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் ஸ்டைல் எனக்கு என் மீது இருந்த தன்னம்பிக்கையை குறைத்து விட்டது. கதை சொல்லும் விதம் எனக்கு பிடிபடவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி அவர்களை சம்மதிக்க வைப்பதெல்லாம் முடியாது. அதனால் நமக்கெல்லாம் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று நம்பினேன். அந்த தருணத்தில் தான் அட்டகத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தயாரிப்பாளர் மதுரையிலிருந்து வருகை தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை ஃபேஸ்புக்கில் பின் தொடர்ந்தேன். ஒரு நாள் அவருடைய சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து கதையை கேட்டார். அவரை சந்தித்த உடன் நான் சொன்ன முதல் வார்த்தை எனக்கு கதை சொல்ல வராது என்றேன், அவர் பரவாயில்லை திரைக்கதையை கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் கதையை வாசித்து விட்டு படம் தயாரிக்கலாம் என்றார். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் தற்போது நின்றிருக்கும் அனைத்து திறமைசாலிகளையும் உருவாக்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சூது கவ்வும் படத்தின் கதையை நலன் குமாரசாமி எழுதும்போதே எனக்கு தெரியும். அவர் ஃபாதர் ஆப் டார்க் ஹுயூமர். அவருடைய திரைக்கதை சிறப்பாக இருக்கும். சூது கவ்வும் படத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்புள்ள ஒரே கதாபாத்திரம் அருமை பிரகாசம். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்,” என்றார்.













