தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியான வில்லன் நடிகராக உருவெடுத்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் நடிக்கும் பான் இந்தியா நடிகராகவும் வலம் வருகிறார்.இந்த நிலையில், மலையாள திரையுலகம் மற்றும் எழுத்துலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வரும் மலையாள புரஷ்காரம் சமிதி, நடிகர் திலீப் நடித்த ’தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்த சம்பத் ராமுக்கு, சிறந்த வில்லன் நடிகருக்கான ‘மலையாள புரஷ்காரம் 1200’ விருது வழங்கி கெளரவித்துள்ளது. கேரளாவின் கெளரவம் மிக்க விருதுகளில் ஒன்றான இவ்விருதுக்குரியவர்களை அம்மாநில பத்திரிகையாளர்கள், கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் எழுத்தாளர்கள் குழு தேர்வு செய்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.













