நடிகர் அஜித் குமார் விடா முயற்சி, குட் பேட் அக்லி படங்களைத் தொடர்ந்து கார் பந்தய போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி, உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகள் வென்று வருகிறார். இந்நிலையில்; இத்தாலியில் நடந்து வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். நேற்று முன்தினம் அவரது அணி 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த ரேஸ் போட்டியில் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் முழு வேகத்தில் வந்த அஜித்தின் கார் கட்டுபாட்டை இழந்து மோதியது. இதில் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.இதையடுத்து டிராக்கில் இருந்து அந்த கார்கள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
விபத்தைத் தொடர்ந்து காரில் இருந்து பத்திரமாக இறங்கிய அஜித், டிராக்கில் சிதறிக்கிடந்த கார் பாகங்களை அங்கிருந்த ஊழியர்களுடன் சேர்ந்து அப்புறப்படுத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்குமார் அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.முன்னதாக ஏற்கனவே இதேபோன்று அஜித் குமார் கார் ரேஸின் போது, 2முறை விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னதாக துபாயில் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இவரது கார் வளைவில் திரும்ப முயன்ற போது தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் இரண்டு மூன்று முறை தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனினும் நல்வாய்ப்பாக அஜித்குமாருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து இந்த கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்றார்.இதில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இதில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், அவரது கார் மட்டுமே பயங்கரமாக சேதமடைந்துள்ளது.இந்நிலையில் தற்போது இத்தாலியில் நடந்து வரும் ஜிடி 4 கார் ரேஸ் போட்டியின் 2 ஆவது நாளில் அஜித் குமார் சென்ற கார் டிராக்கில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













