தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் தயாரிப்பில் வெளி வந்துள்ள ஃபேன்டசித் திரைப்படம், ராவ் பகதூர். இயக்குநர் வெங்கடேஷ் மகா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சத்யதேவ்,விகாஸ் முப்பாலா ,தீபா தாமஸ்,பால பராசர், திருடா திருடா ஆனந்த், பிரனய் வகா,குணால் கௌசிக்,மாஸ்டர் கிரண்,வெங்கடேஷ் மஹா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, கார்த்திக் பர்மர். இசை, ஸ்மரன் சாய்.
மருத்துவர்களால் கைவிடப்பட்டு மரணப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும், ஆண்ட பரம்பரையின் வாரிசு ராவ் பகதூர். ‘சத்தியம் செத்துவிட்டது சத்தியம் செத்துவிட்டது’. வீடு சுடுகாடாகப் போகிறது! என கண்டபடி பிதற்றி வருகிறார். மேலும் தனது இளைய மகன் தனக்கு பிறந்தவன் அல்ல என்றும் சந்தேகம் கொள்கிறார். என்ன நடந்தது? அவர் பிதற்றலுக்கு என்ன காரணம்? என்பதை, குடும்ப மருத்துவர் விளக்குவது போல் திரைக்கதை திரையில் விரிகிறது.
‘ராமப்பா ராவ் பகதூர்’ என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார், சத்ய தேவ். இவர் தான் படத்தின் முழு, முதல் பலம். இளமையாகவும் வயது முதிர்ந்தவராகவும் இருவேறுவிதமான நடிப்பினை வெளிப்படுத்தி மொத்தப் படத்தினையும் தன் தோளில் சுமந்து செல்கிறார். கோபம், வெறுப்பு, மன உளைச்சல், சந்தேகத்தால் ஏற்படும் தவிப்ப்பு என அனைத்து உணர்வுகளையும் அப்படியே கடத்துகிறார். விருதுகளால கௌரவிக்கப்பட வேண்டிய நடிப்பு!
சத்யதேவின் நண்பராகவும், மருத்துவராகவும் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா திரைக்கதைக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தீபா தாமஸ், அலட்டலில்லாத நடிப்பில் ரசிகர்களை ஆட்கொண்டுவிடுகிறார். க்ளைமாக்ஸில் அவரது காட்சிகள் மாஸ்!
பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, மாஸ்டர் கிரண் உள்ளிட்டோரும் திரைக்கதைக்கு சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பர்மர் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்மரன் சாய் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம்.
கலை இயக்குநர் ரோஹன் சிங்கின் பணி, மிகப்பெரும் பணி. அரங்குகள் பிரமிக்க வைக்கிறது.
கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்திருக்கிறார், வெங்கடேஷ் மகா. ஆண்ட பரம்பரைகளின் ஆணவத்தை தவிடு பொடியாக்கியிருக்கிறார். உளவியல் சார்ந்த த்ரில்லர் பாணியிலான திரைக்கதை அமைப்பு சுவாரசியம்!
‘ராவ் பகதூர்’ – ஃபேன்டசி மிரட்டல்!












