‘2 எம் சினிமாஸ்’ – டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், லட்சுமி காந்தன் கொலை வழக்கு’. இதில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா , மாறன், சரவணன் , லிஸி ஆண்டனி, அருவி மதன், கன்யா பாரதி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாள் பத்மநாபன் எழுதி இயக்கியிருக்கிறார். திரைக்கதை வசனம் கவிதா பாரதி, தயாள் பத்மநாபன். இசை, தர்புகா சிவா. ஒளிப்பதிவு, எம்.வி. பன்னீர்செல்வம்.
1960 களின் பிற்பகுதியில் கதை நடக்கிறது. புத்தி கூர்மையுள்ள படித்த பட்டதாரி இளைஞன், வெற்றி. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், தினசரி ஜீவாதாரத்திற்கே அல்லல் படும் சூழ்நிலை. வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க திருட ஆரம்பிக்கிறார். அறுமையின் பிடி தளர்கிறது. பிரிகிடா சகாவை காதல் திருமணம் செய்து கொள்கிறார். மனைவி பிரிகிடாவின் யோசனைப்படி கடைசி திருட்டாக கவிதா பாரதியின் வீட்டிலிருக்கும் தங்களது நில பத்திரத்தை திருடச்செல்கிறார், வெற்றி. அப்போது நடக்கும் கை கலப்பில் கவிதாபாரதி கொல்லப்படுகிறார். வெற்றி தானாக வந்து சரணடைகிறார். இதனால், அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். தூக்கிலடப்படும் சில மணி நேரங்களுக்கு முன்னர் வெற்றி, ஜெயில் வார்டன் ரங்கராஜ் பாண்டேவிடம், ‘தூக்குத் தண்டனையும் ஒரு கொலை தான்’. என விவாதம் செய்கிறார். அந்த விவாதம் என்ன? வெற்றித் தூக்கிலடப்பட்டாரா? என்பதை எந்தவிதமான சுவாரசியமோ, விறுவிறுப்போ இல்லாமல் சொல்வது தான், இந்த ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’.
தூக்குத்தண்டனை வேணுமா, வேணாமா? என்பதை ஒரு சார்பாக விவாதித்திருக்கிறார்கள். அதனாலேயே இந்தப்படம் பார்வையாளர்களுக்கு எந்தவிதமான உணர்வினையும் கொடுக்கவில்லை. சிறுபிள்ளைதத்னமான, நாடகத்தனமான படமாக்கலும், வசனங்களும் படத்தின் ஆகப்பெரும் பலவீனம்.
வெற்றி, வழக்கமான ஒன்றிரண்டு முகபாவனைகளுடன் வலம் வருகிறார். இயக்குநர் தயாள் பத்மநாபனும் அவரிடம் பெரிதாக நடிப்பினை வெளிகொண்டுவர முயற்சிக்கவில்லை! என்பது போல் தெரிகிறது. வெற்றிக்கும், ரங்கராஜ் பாண்டேவுக்கும் இடையே நடக்கும் வாத, பிரதிவாதம் எல்லாம் கேலிக்கூத்து! ரங்கராஜ் பாண்டேவுக்கு நல்ல ஸ்க்ரீன் பிரசன்ஸ். நடிப்பதற்கு நல்ல காட்சிகளும், நல்ல இயக்குநரும் கிடைத்தால் பிரகாசிப்பார்!
பிரிகிடா சகா. மூக்கும் முழியுமாக வசீகரிக்கிறார். சில காட்சிகள் என்றாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசப்படுத்தி விடுகிறார்.
லொள்ளு சபா மாறன், லிஸி ஆண்டனி, கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்!
ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசை படத்திற்கு பெரிதாக உதவவில்லை!
மற்றபடி படத்தில் பெரிதாக குறிப்பிட்டுச்சொல்ல எதுவுமில்லை.
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ – சித்ரவதை!












