சூப்பர் ஹிட் அடித்த முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு சுவாரசியமான குடும்பப் பின்னணியுடன் களம் இறங்கியுள்ளது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம்.
குழந்தை பிறந்துவிட்டதால் தன் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று கவலைப்படும் கீர்த்திக்கு (ஐஸ்வர்யா லட்சுமி), அவரது கணவர் வீரா (விஷ்ணு விஷால்) ஊக்கமளிக்கிறார். மனைவியின் தேசிய லட்சியத்திற்காக, வீரா வீட்டையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ளும் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ (House Husband) ஆக மாறுகிறார். கணவனின் முழு ஆதரவோடு கீர்த்தியும் தேசிய அளவிலான குஸ்தி போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் மகள் பள்ளிப் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்துவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவருகிறது. தந்தையின் அதீத செல்லத்தால் தான் மகள் இப்படி வளர்கிறாளோ என்று பயப்படும் கீர்த்தி, மகளைக் கண்டிப்புடன் வளர்க்கத் தொடங்குவதோடு, அவளையும் ஒரு குஸ்தி வீராங்கனையாக்க முயற்சிக்கிறார்.
குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக கீர்த்தி எடுக்கும் முடிவுகள், அவருக்கும் வீராவுக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது. தாயின் கண்டிப்பும், தந்தையின் பாசமும் மோதிக்கொள்ளும் இந்த ‘குடும்பக் குஸ்தி’, எதிர்பாராத சில சூழ்நிலைகளால் விவாகரத்து (Divorce) கோரும் அளவிற்குப் பெரிய விரிசலாக மாறுகிறது.
சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட இந்தத் தவறுகளைத் திருத்தி, தன் குடும்பத்தை மீட்க வீரா எடுக்கும் முயற்சிகள் என்ன? அவர் மீண்டும் தன் மனைவியுடன் இணைந்தாரா இல்லையா? என்பதைப் படம் முழுக்க கலகலப்பான நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுடன் விவரித்திருக்கிறார், இயக்குநர் செல்ல அய்யாவு.

விஷ்ணு விஷால் மாஸ் இமேஜைக் கடந்து, மனைவியின் திறமையைக் கொண்டாடும் ஒரு உன்னதமான கணவராகத் தோன்றி பெண்களின் அமோக ஆதரவைப் பெறுகிறார். வீட்டைப் பராமரிப்பது, குழந்தையை வழிநடத்துவது என ஒரு சிறந்த குடும்பத் தலைவனாகத் தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். அதே வேளையில், ரசிகர்களைக் கவரும் சண்டைக் காட்சிகளிலும், விஜய் – த்ரிஷா குத்தாட்டம் போட்டா ‘அப்படி போடு’ என்ற பாடலுக்கு ஆடிய துள்ளலான நடனத்திலும் தியேட்டரை அதிர வைத்துள்ளார்.
இப்படத்தின் அச்சாணியாக விளங்கும் ஐஸ்வர்யா லட்சுமி, கதாநாயகனுக்குச் சமமான முக்கியத்துவம் கொண்ட பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். குஸ்தி மைதானத்தில் ஆக்ரோஷமான வீராங்கனையாக எதிரிகளைத் திணறடிக்கும் அவர், கணவனுடன் நடக்கும் குத்து சண்டைப்போட்டியின் போது அவர் செய்யும் சிலுமிசத்தால் திணறும் காட்சியிலும், குழந்தையின் பிரிவை நினைத்து வருந்தும் காட்சியிலும் மிகச்சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
டீச்சராக வரும் மோக்ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி மற்றும் கருணாகரன் போன்றவர்களும் தங்களின் டைமிங் காமெடி மூலமாகவும் உடல் மொழியாலும் ரசிகர்களை சிரிக்கவைக்கின்றனர்.
கட்டா குஸ்தி 2 – சிரிக்க வைக்கும்!












