‘ஆக்டோபஸ்’ வெப்சீரிஸ் விமர்சனம்!
திடுக்கிடும் திருப்பங்களும் நீதிமன்ற விசாரணையும்! – ZEE5-ன் 'ஆக்டோபஸ்' வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது?

மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ZEE5 ஒரிஜினல் வெப் தொடர்தான் ‘ஆக்டோபஸ்’. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடரை சினிமம் நிறுவனம் சார்பில் லிஷா சந்திரன், ஆதித்யா ராஜு மற்றும் கல்ட் டிஜிட்டல் சார்பில் சுனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி ஆகியோர் தயாரித்துள்ளனர். அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரே சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியில் சொந்த பந்தங்கள் போல மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதிக்குப் புதிதாகத் திருமணமான அஷ்வின் குமார் மற்றும் சித்து குமரேசன் தம்பதியினர் குடிவருகின்றனர். குடியிருப்பில் உள்ள அனைவரிடமும் சித்து குமரேசன் அன்பாகப் பழகி அவர்களின் பாசத்தைப் பெறுகிறார். ஆனால், கணவனாக வரும் அஷ்வின் குமாரோ கடும் சந்தேக குணமும் முரட்டுத்தனமும் கொண்டவராக இருக்கிறார். வீட்டிற்குள் மனைவியை அவர் அடித்துத் துன்புறுத்துவது அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், ஒரு நாள் இரவு அந்த வீட்டிலிருந்து கேட்கும் பெண்ணின் அலறல் சத்தம் ஒட்டுமொத்த குடியிருப்பையும் பதற்றமடையச் செய்கிறது. மறுநாள் காலையில் அந்தப் பெண் மர்மமான முறையில் மாயமாகிறார். இதுகுறித்துப் போலீஸில் புகார் அளித்தால், அப்படியொரு பெண் அங்கு வாழ்ந்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை எனப் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடையும் குடியிருப்புவாசிகளின் துணையோடு, அதே குடியிருப்பில் வசிக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன் மாயமான பெண்ணைத் தேடத் தொடங்குகிறார். அதன்பிறகு வெளிவரும் திடுக்கிடும் உண்மைகளும், உறைய வைக்கும் க்ளைமாக்ஸும் தான் ‘ஆக்டோபஸ்’ தொடரின் மையக்கரு.
நடிப்பைப் பொறுத்தவரை இத்தொடரில் நடித்த அனைவருமே தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக, அர்ச்சனா ரவிச்சந்திரன் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மொத்தக் கதையையும் தன் தோளில் சுமந்துள்ளார். வழக்கமான சாக்லேட் பாய் இமேஜிலிருந்து விலகி, சந்தேகமும் மர்மமும் நிறைந்த எதிர்மறைக் கணவன் கதாபாத்திரத்தில் அஷ்வின் குமார் மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாகத் தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை இத்தொடரின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மர்மம் நிறைந்த காட்சிகளிலும் பதற்றமான தருணங்களிலும் அவரது இசை பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றச் செய்கிறது. கண்ணா ஆர். ஒளிப்பதிவு கதைக்களத்தின் அடர்த்திக்கு ஏற்ப அமைந்துள்ளது. ராம் பாண்டியனின் படத்தொகுப்பு கதையின் ஓட்டத்திற்கு உதவினாலும், சில இடங்களில் நீளத்தைக் குறைத்து இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஒரு சாதாரணக் குடும்பப் பிரச்சினையை மையமாக வைத்து, அதைச் சமூகப் பிரச்சினை மற்றும் மர்மம் நிறைந்த திரில்லராக மாற்றிய விதம் பாராட்டுக்குரியது. ஆரம்பத்தில் குடியிருப்புவாசிகளின் அன்பு, நகைச்சுவை என இயல்பாகத் தொடங்கும் கதை, பெண் காணாமல் போன பிறகு விறுவிறுப்பான வேறு தளத்திற்குச் செல்கிறது. குறிப்பாக, நீதிமன்ற விசாரணை காட்சிகளும் அதில் வெளிப்படும் அதிர்ச்சிகரமான உண்மைகளும் திரைக்கதைக்குப் பெரும் வலுசேர்க்கின்றன.
இருப்பினும், சில இடங்களில் கதை மெதுவாக நகர்வதும், தேவையற்ற நீளமும் சற்று பொறுமையைச் சோதிக்கின்றன. அந்தச் சின்னச் சின்னத் தொய்வுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அடுத்தடுத்து வரும் மர்மங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தொடரைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன. மொத்தத்தில், சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் நீதிமன்றப் பின்னணி கொண்ட கதைகளை விரும்புபவர்களுக்கு இந்த ‘ஆக்டோபஸ்’ நிச்சயம் ஒரு நல்ல விருந்தாக அமையும்.