தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது வெற்றிக் கூட்டணியின் அடுத்த புதிய பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்திற்கு “மக்கள் காவலன்” (Makkal Kaavalan) என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய படங்களின் தொடர் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நாயகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டன், தனது திரைப்பயணத்திலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க ஒரு பக்கா மாஸ் முழுநீள ஆக்ஷன் டிராமா திரைப்படத்தில் அதிரடி கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.
எழுத்தாளரும் இயக்குநருமான சந்தோஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், இந்தச் சமூகத்தில் எந்தவொரு தவறும் செய்யாமல் மிகவும் கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாமானிய மனிதனின் கதையைச் சொல்கிறது. சுற்றிலும் ஊழல் நிறைந்து போயிருக்கும் ஒரு மோசமான அரசு கட்டமைப்பு, அவனது நேர்மைக்கு முன்னால் ஒன்று சரணடைவது அல்லது துணிச்சலுடன் எதிர்த்து நிற்பது என்ற இரண்டு கடினமான வழிகளை மட்டுமே விட்டுச் செல்கிறது.
ஆரம்பத்தில் ஒரு தனிமனிதனின் உயிர்வாழ்வுக்கான எளிய போராட்டமாகத் தொடங்கும் இந்த அதிரடிப் பயணம், அவன் சற்றும் எதிர்பாராத விதமாக ஒட்டுமொத்த மக்களின் தலைவனாக அவனை மாற்றும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கிறது. இந்த அரசியல் போராட்டம் தீவிரமடையும் போது அதற்கான விலையும், இழப்புகளும் அதிகரிக்க, இறுதியில் ஒரு சாதாரண மனிதனுக்கும் ஒட்டுமொத்த மக்களின் காவலனுக்கும் இடையே இருக்கும் எல்லைக்கோடு மெதுவாக மறைந்து போவதை இயக்குநர் ஆக்ஷன் கோணத்தில் திரையில் செதுக்கியுள்ளார்.
இப்படத்தின் பிரம்மாண்ட உலகத்தை உருவாக்கத் தென்னிந்திய சினிமாவில் அசாத்திய திறமை வாய்ந்த நட்சத்திர பட்டாளங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் களம் இறங்கியுள்ளனர். அதன்படி நாயகன் கே. மணிகண்டனுடன் இணைந்து மூத்த கலைஞர் வாகை சந்திரசேகர், இயக்குநர்-நடிகர் ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாகத் தொடரும் இந்தக் கூட்டணியின் புதிய படத்திற்கு மெலடி மன்னன் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை, பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவையும், அருள் மோசஸ் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர். படத்தின் பிரம்மாண்ட செட்டுகளைக் கலை இயக்குநர் பாப்பநாடு சி. உதயகுமார் வடிவமைக்க, தியேட்டர்களை அதிரவைக்கும் சண்டைக் காட்சிகளை ஆக்ஷன் மாஸ்டர் டான் அசோக் வடிவமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பின்னணி குறித்து பிர்லா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி பேசுகையில்,
எப்போதுமே சினிமா உலகிற்குள் மிகவும் வலுவான, தனித்துவமான குரல் கொண்ட புதிய படைப்பாளிகளையும், ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களுடன் மிகவும் ஆழமாக ஒன்றிணைந்து பயணிக்கும் வாழ்வியல் கதைகளையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதில் தங்களது தயாரிப்பு நிறுவனம் எப்போதுமே உறுதியாக இருக்கிறது என்றார்.

நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் பேசுகையில்,
தற்காலத் தமிழ் சினிமாவில் மிகத் திறமையான இளம் எழுத்தாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் குமாரை உலகளாவிய சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டனர். மணிகண்டனின் அசாத்தியமான நடிப்புத் திறன் இந்தத் திரைப்படத்தின் ஒட்டுமொத்தக் கதைக்கும் ஒரு மிகப்பெரிய மாஸ் பலமாக இருக்கும் என்பதில் தங்களுக்கு எந்த ஐயமும் இல்லை என்றனர்.
படத்தின் நாயகன் கே. மணிகண்டன் பேசுகையில்,
இந்த மக்கள் காவலன் திரைப்படம் என்பது வெறும் கமர்சியல் ஆக்ஷன் படம் மட்டுமல்ல; இது நமது கலாச்சார மற்றும் ஆழமான இன மோதல்களை மையமாகக் கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான ஆக்ஷன் டிராமா திரைப்படமாகும் என்றார். இயக்குநர் சந்தோஷ் குமார் இந்தத் திரைக்கதையை என்னிடம் முதன்முதலாக விவரித்தபோதே, இதில் இருந்த கதையின் அசாத்திய புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்துவிட்டது. இது தியேட்டர்களில் ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான, தீவிரமான ஒரு பக்கா சமூகப் படமாக இருக்கும். இது எங்கள் ஒட்டுமொத்தப் படக்குழுவின் கனவு படம்; நாங்கள் எப்படி நினைத்தோமோ, அதேபோல் திரையில் இப்படம் கச்சிதமாக உருவாகியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இறுதியாகப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் குமார் பேசுகையில்,
இந்த மக்கள் காவலன் திரைப்படம் என்பது எனது திரைப்பயணத்தின் முதல் முழுநீளத் திரைப்படமாகும் என்றார். இது ஏதோ கற்பனையாக எழுதப்பட்ட கதை அல்ல; நான் நிஜ வாழ்க்கையில் சந்தித்த சாமானிய மனிதர்கள், நான் வாழ்ந்த எதார்த்தமான அனுபவங்கள் மற்றும் என் கண்களால் நான் நேரில் கண்ட உண்மைகளின் ஆழமான தாக்கத்திலிருந்து மட்டுமே இந்தத் திரைக்கதை முழுமையாக உருவானது. நமது சமூகத்தின் அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் பல்வேறு படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும், வர்க்கப் போராட்டத்தையும் இந்தப் படம் மிகவும் அழுத்தமாகப் பேசுகிறது என்றார். அந்த மோசமான கட்டமைப்புக்கு நடுவிலும் தனது சுயமரியாதையையும் நேர்மையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு சாதாரண மனிதன் எப்படியெல்லாம் போராடுகிறான் என்ற சுவாரசியமான வாழ்வியலையும் இத்திரைப்படம் தியேட்டர்களில் ரசிகர்களுக்கு அக்குவேற ஆணிவேறாக விவரிக்கும் என்று இயக்குநர் தன் உரையை நிறைவு செய்தார்.












