சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்குப் புதுவாழ்வு அளிக்கவும், பொழுதுபோக்கைச் சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றவும் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ என்ற கட்டணமில்லா புதிய ஓடிடி தளம் தமிழ் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இத்தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசுகையில்,
“எங்கள் பவுண்டேஷன் புதுச்சேரியில் கடலடி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கின்னஸ் சாதனை படைத்த போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாராட்டுகளைப் பெற்றது. அந்தச் சமூகச் சேவையின் அடுத்த கட்டமே இந்த ஓடிடி தளம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது; பொதுமக்கள் அனைத்துப் படங்களையும் இலவசமாகப் பார்க்கலாம்.அதே சமயம், நற்பணிகளுக்கு உதவ விரும்பும் பார்வையாளர்கள் ‘இம்பாக்ட் டிக்கெட்’ மூலம் தங்களுக்கு விருப்பமான தொகையை நன்கொடையாக அளிக்கலாம். அந்த நிதியின் பெரும்பகுதி சமூகச் சேவைக்கும், எஞ்சிய பங்கு திரைப்படக் குழுவினருக்கும் பிரித்து வழங்கப்படும். மேலும், இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இதில் ‘SOS’ அவசரக் கால பாதுகாப்பு தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,
“தற்போது கார்ப்பரேட் ஓடிடி நிறுவனங்கள் சிறிய படங்களை வாங்குவதை நிறுத்திவிட்டதோடு, ஒரு படத்தின் ரிலீஸ் தேதியையும் அவர்களே தீர்மானிக்கும் அளவிற்குச் சினிமாவைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் 1000 படங்களில், குறைந்தபட்சம் 200 நல்ல படங்களாவது இருக்கும். இத்தளம் அந்த நல்ல படங்களை வாங்கி வெளியிட வேண்டும். மேலும், இதன் மொத்த லாபத்தில் 20 சதவீதத்தை நலிவடைந்த திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காகத் தரப்போவதாக கிஷோர் உறுதியளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

மூத்த கலைஞர் எஸ்.வீ.சேகர் பேசுகையில்,
“இலவசமாகத் தருகிறீர்கள் என்பதாலேயே மக்கள் படங்களைப் பார்க்க மாட்டார்கள், தரமான உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்” என அறிவுறுத்தினார். இயக்குநர் மற்றும் நடிகர் போஸ் வெங்கட், “தற்போது ஓடிடி சந்தை பெரும் பண முதலைகளின் கோட்டையாக மாறியுள்ளது, இதில் ஜெயிக்க இளைஞர்களின் புதிய கற்பனைகளைக் கைகளில் எடுக்க வேண்டும்” என்றார்.
பன்முகக் கலைஞர் யூகி சேது பேசுகையில்,
“ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துப் பழகிப்போன இன்றைய இணைய உலக நுகர்வோரால் சினிமாவின் அழகியலே மாறிவிட்டது. சினிமாவில் எப்போதுமே ஜனரஞ்சகத் தன்மை மிக முக்கியம்” என்றார்.
தயாரிப்பாளர் மதியழகன் மற்றும் நடிகர் மைம் கோபி ஆகியோர் கிஷோரின் இந்த இலாப நோக்கற்ற அரிய முயற்சியைப் பாராட்டி வாழ்த்தினர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த ஏழைப் பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதியுதவிகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஜான் ஜூலியஸ், இயக்குநர் புருனோ, தயாரிப்பாளர்கள் ஜே.கே.சரவணன், ஜே.கே.சதீஷ் மற்றும் ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.












