கடந்த ஆகஸ்ட் 14, 2026 அன்று சுதந்திர தினக் கொண்டாட்டமாகத் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை நடத்தி வருகிறது. ரிலீஸான சில நாட்களிலேயே உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆரம்பக்கட்ட விளம்பரங்கள் மூலமே பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பிய இப்படம், குடும்ப உறவுகளின் மேன்மையையும் மனதைத் தொடும் பாச உணர்வுகளையும் மையமாகக் கொண்ட பக்கா ‘ஃபீல்-குட்’ எண்டர்டெய்னராக வெளியாகியுள்ளது. இதனால், வார நாட்களிலும் திரையரங்குகளில் குடும்ப ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை உலகெங்கும் வழங்கியுள்ளது. ஏற்கனவே ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி – நாக வம்சி கூட்டணி, சூர்யாவுடனும் தங்களது வெற்றிக் கூட்டணியைத் தொடர்ந்து நிரூபித்துள்ளது.
இப்படத்தின் மிகப்பெரிய பலமாக சூர்யாவின் எதார்த்த நடிப்பு அமைந்திருந்தாலும், அவருடன் இணைந்து நடித்த மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ரவீனா டாண்டன் ஆகியோரின் கதாபாத்திரங்களும், அவர்களது எமோஷனல் ஆக்டிங்கும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து பாராட்டுக்களை அள்ளி வருகிறது.சூர்யாவின் முந்தைய பிளாக்பஸ்டர் படமான ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூலைத் தொடர்ந்து, தற்பொழுது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படமும் ரூ. 200 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தியேட்டர்களில் நிலவும் தற்போதைய கூட்டத்தைப் பார்க்கும்போது இந்த வசூல் வேட்டை வரும் வாரங்களில் இன்னும் பல மடங்கு உயரும் என விநியோகஸ்தர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவின் இந்தத் தொடர் வசூல் வேட்டை அவரது ரசிகர்களை இரட்டைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.












