
பெருந்தலைவர் காமராஜர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் லட்சம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் சுதந்திரா கட்சி வேட்பாளர் டாக்டர் மத்தியாசை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது நாடறிந்தது..!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இடைத் தேர்தல்.!
திமுக தலைவர் கலைஞரும் ,சுதந்திரா கட்சித் தலைவர் மூதறிஞர் இராஜகோபாலாச்சாரியும் இணைந்து எப்படியும் தலைவர் காமராஜரை தோற்கடித்தாக வேண்டும் என்கிற முனைப்புடன் வன்முறையை துணை சேர்த்துக்கொண்டு செயலாற்றிய தேர்தல் அல்லவா அந்த இடைத்தேர்தல்?!
ஆனால் எண்ணியதற்கு மாறாக காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பெரியவருக்கு காணிக்கையாகத் தந்தது.
காங்கிரஸ் சார்பில் ப.நெடுமாறனும் ,திமுக சார்பில் மதுரை முத்துவும் களமிறங்கிய தேர்தல் என்பதால் மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் அந்த வெற்றியைத் திருவிழாவாக கொண்டாடினார்கள். குறிப்பாக வைகை வடகரையில் அமைந்த ஆழ்வார்புரத்தில்!
நேரு படிப்பகம் -திமுக படிப்பகம் என அதே பகுதியில் அருகருகில் இருந்தாலும் வெற்றி விழா மோதலில் முடியும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.மதுரை நகர் முழுவதும் பரவக்கூடும் என்கிற பயம் வந்து விட்டது காவல் துறைக்கு.! இரு தரப்பினருமே சட்டென ஆயுதம் தூக்குவதற்குத் தயங்காதவர்கள். எதிரெதிராக இருந்த மதுரைமுத்துவுக்கும் கேப்டன் சீனிக்கும் உடலெங்கும் “வீரத் ‘தழும்புகள் இருந்தன என்பது .!மிகையல்ல உண்மை.!
அப்போதைய எஸ்.பி.ஸ்ரீபால் கலவரமாக வெடித்து விடக்கூடாது என்பதற்காக சமரச முயற்சியை மேற்கொண்டார். இரு தரப்பினரையும் அழைத்துப்பேசி அமைதிப்படுத்துவது என்பது அவரது திட்டம்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ப.நெடுமாறனிடம் கேட்டபோது “நல்லதுதான்”என்பதாக பதில் கிடைத்திருக்கிறது. திமுக.தரப்பும் இணக்கமாக இருக்கவே ஸ்ரீபால் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதாக அமைந்து விட்டது.
இருதரப்பினரும் நன்னடத்தை ஜாமீனில் வெளிவரவேண்டும் என காவல் துறை தங்களுக்கு சாதகமாக திட்டத்தை வகுத்து விட்டனர்.
காங்கிரஸ் தரப்பில் ப.நெடுமாறன் பெயரையும் சேர்த்து விட்டனர். சம்பந்தமே இல்லாமல் .நடந்த மோதலுக்கு எந்த வித தொடர்பும் இல்லாத நெடுமாறனை இணைத்தால் கோபம் வருமா வராதா?
எஸ்.பி.க்கு போன் போட்ட நெடுமாறன் கடுமையாக தன்னுடைய எதிர்ப்பை ,கருத்தை பதிவு செய்து விட்டார். ” என்னிடம் ஆலோசனை கேட்டு விட்டு என் மீதே ஜாமீன் வழக்குப் போட்டது என்ன நேர்மை நியாயம்?”
எஸ்.பி.கேட்பதாக இல்லை. வீட்டில் நோட்டீஸ் ஒட்டி கைது செய்தும் விட்டார்கள்.
தமிழக அரசியல் பரபரப்பாகி விட்டது.
கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் மதுரையில் மிகப்பெரிய கண்டன கூட்டத்தை மாநாடுபோல நடத்தி விட்டார்கள். தென்மாவட்டங்களில் தொடர் பொதுக்கூட்டங்கள். கவிஞரும் எழுத்துலக மன்னனும் இணைந்து பேசினால் எழுச்சிக்கு கேட்கவேண்டியதில்லை.
“நான் ஜாமீன் வாங்கப்போவதில்லை”என்பதை மாஜிஸ்திரேட்டிடமும் சொல்லிவிட்டார் நெடுமாறன்.
காவல்துறையும் அரசும் என்ன செய்வது என்பது தெரியாமல் கை பிசைந்து நின்றன.
இந்த கட்டத்தில்தான் பெருந்தலைவர் காமராஜர் நேரில் நெடுமாறனை சந்திக்க விரும்பினார்.
நெடுமாறன் விரும்பவில்லை. ஏழாண்டுகள் வெள்ளையனை எதிர்த்து சிறை வாசம் செய்த தலைவர் மீண்டும் சிறைக்குள் கால் வைப்பதை விரும்பவில்லை.
ஆனால் நடந்ததோ வேறு!
நாகர்கோவிலில் வெற்றி வாகை சூடிய தலைவர் மக்களவை உறுப்பினர் காமராஜர் சிறைச்சாலைக்கு வருவது தனக்குப் பெருமை என்று நினைத்து விட்டார் சிறை அதிகாரி!
போலீஸ் மரியாதையுடன் காமராஜர் வரவேற்கப்பட்டார்.
அரசாங்கம் அதிர்ந்தது.
அடுத்தநாளே அந்த அதிகாரி டிரான்ஸ்பர் !
“மன்னிப்புக் கேட்க மாட்டான் நெடுமாறன்! அவன் மாவீரன்!” என மதுரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் முழங்கினார் காமராஜர்.
அத்தகு பெருமைக்கு என்றும் உரியவர் நெடுமாறன் என்பது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் இன விடுதலைப்போருக்கு துணையாக நின்றவர் என்பதிலிருந்து தெரிகிறதல்லவா?
–தேவிமணி.












