‘டெலிவரி பாய்’ – விமர்சனம்!
அன்றாடம் நம் வீட்டு வாசலுக்கு உணவு கொண்டு வந்து சேர்க்கும் ஒரு சாதாரண டெலிவரி ஊழியரின் வாழ்வில், சூழ்நிலை காரணமாக நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதன் விளைவுகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டெலிவரி பாய்’. நானி தர்லா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை, அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் தயாரித்துள்ளனர்; கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் வலம் வரும் இளைஞர் லியோ சிவகுமார், குடும்ப வறுமை காரணமாக உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தன் தாயார் ராதிகா சரத்குமார் மீது அளவற்ற அன்பு கொண்டவர். இந்நிலையில், எதிர்பாராத விபத்தில் சிக்கி அவரது தாயார் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிகிச்சைக்குப் பெரும் தொகை தேவைப்பட, பணத்தைத் திரட்ட வழியின்றித் தவிக்கும் லியோ சிவகுமார், சூழ்நிலையின் அழுத்தத்தால் ஒரு தவறான முடிவை எடுத்துச் செயல்படுத்துகிறார். அந்த ஒரு செயல் அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு, தான் செய்த அந்தச் செயலால் ஒரு நிரபராதி கொலைக் குற்றத்தில் சிக்கியிருக்கும் அதிர்ச்சித் தகவல் அவருக்குத் தெரியவருகிறது. தன் சுயநலத்தால் மற்றொருவரின் வாழ்க்கை சிதைந்துவிட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நாயகன், அந்த நிரபராதியை மீட்க மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார், இப்படத்திற்காகத் தன்னை முழுமையாக வருத்திக் கொண்டு உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. தோற்றத்தில் புதிய பொலிவுடன் காணப்படும் அவர், காதல் காட்சிகளில் இயல்பாகவும், சண்டைக் காட்சிகளில் முதிர்ச்சியுடனும் செயல்பட்டுள்ளார்; குறிப்பாக உணர்ச்சிகரமான தருணங்களைக் கையாண்ட விதத்தில் ஒரு முழுமையான ஆக்ஷன் நாயகனாகத் தன்னை நிரூபித்துள்ளார். தாயாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார் தன் அனுபவ நடிப்பால் கதைக்குப் பலம் சேர்த்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா, முதல் பாதியின் நகர்வுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறாரே தவிர, திரைக்கதை முழுவதும் பயணிக்கவில்லை என்பது ஒரு சிறிய குறையாகத் தெரிகிறது. காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த் மற்றும் உதயா தீப் ஆகியோரின் பாத்திரப் படைப்பும் நடிப்பும் திரைக்கதைக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன. எதிர்மறைக் கதாபாத்திரங்களில் வரும் ஏழு இளைஞர்களின் கூட்டணி, பழைய தமிழ் சினிமா வில்லன்களை நினைவுபடுத்தினாலும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைக் குறையின்றிச் செய்துள்ளனர்.
அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலம். சண்டைக் காட்சிகளையும், துரத்தல் (Chasing) காட்சிகளையும் விறுவிறுப்பாகப் படமாக்கியிருப்பதோடு, நாயகன், நாயகி மற்றும் புதுமுக நடிகர்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தியின் இசையும் கதையின் ஓட்டத்திற்குத் துணைநிற்கிறது.
தன்னைப் பாதித்த ஒரு கதைக்கருவைப் புதிய வடிவில் கையாண்டு, கமர்ஷியல் அம்சங்களை அளவாகக் கலந்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு ஆக்ஷன் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நானி தர்லா. சில இடங்களில் வழக்கமான சினிமா பாணி தென்பட்டாலும், நேர்த்தியான கதாபாத்திர வடிவமைப்பும், விறுவிறுப்பான கதை சொல்லலும் ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தை ஒருமுறை பார்க்கக்கூடிய தரமான படைப்பாக மாற்றியுள்ளது.