தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான் அந்த படங்களை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து , தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் இணைந்து, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இதனால் செப்டம்பர் மாதம் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் இன்று காலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,”தமிழ்த் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26.08.2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் ஏ.ராஜ்மோகனைச் சந்தித்து திரைத்துறையில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம்.அந்த மனுவினை பரிசீலித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோரை தமிழ்நாடு அரசு அழைத்து மேற்படி பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தற்போது வேலை நிறுத்தம் என்பது வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேற்படி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, இதனை முதல்வர் ஜோசப் விஜய் கவனத்திற்கு கொண்டு சென்று, முதல்வரின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-முதல் அறிவித்த (புதிய திரைப்படங்கள் வெளியீடு, படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்ஷன்) வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












