நடிகர் விஜய் சேதுபதி தான் நடத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ‘வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அதை எதிர் கொள்ளமுடியாமல் தலைவர் ஓடக்கூடாது’ என பேசி இருந்தார். இந்த கருத்து இணையத்தில் காட்டுத்தீ போல பரவி, விஜய் சேதுபதி, முதல்வர் விஜய் ஆட்சி குறித்து தான் மறைமுகமாக பேசுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், விஜயின் மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கிய இயக்குநர் அட்லி தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகி, வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக உள்ள ‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில், நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “ அட்லி சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது. இயக்குனர் பாலாஜி தரணீதரனை எனக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒரு பக்கக் கதை’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட அவருடைய படங்களைப் பாருங்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு மனிதர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் இழக்காமல் இருப்பது பெரிய விஷயம். யாராவது தன்னைப் பாதித்திருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது. அவர் ஒரு அழகான மனிதர். பாலாஜி மாதிரியான ஒருவரால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு நெருக்கமான நண்பர் எனக்கு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.லிஜோமோல் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அதேபோல் சாய் அபயங்கர் இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் வேறொரு உயரத்துக்கு சென்றிருக்கிறார். அவருடைய இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதே போல் அந்த சின்னப்பையன் ஆவன், கலக்கியிருக்கிறான். இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். ஒரு பக்கம் விருதுகளைப் பெறும் படம், இன்னொரு பக்கம் மிகப்பெரிய வசூலைப் பெறும் படம் என்று இரண்டையும் எப்படி ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கலாம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘பத்தா’ பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன். ஒரு வீரனும், ஒரு அறிவாளியும் சந்தித்தால் அவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் ஒரு வீரனோ, அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும்போது நடக்கும் மாயம் வேறொரு விதமானது. அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. அந்த உணர்வுதான் இந்தப் படத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விஷ்ணு, பாலா, ஹரிஷ், அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ரசிப்பீர்கள்.
எல்லாரையும் திரையரங்கில் சந்திப்போம். இந்தப் படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.” என்றார்.
இந்நிகழ்வில், கலந்து கொண்ட இயக்குன ர் அட்லீ பேசுகையில்,”நான் இப்போ போட்டிருக்கிற சட்டை, பேண்ட், வாட்ச் இதெல்லாம் என்னோட உழைப்புல கிடைச்சதுனு நான் நினைச்சாலும், என் அண்ணன், என் தளபதி இல்லன்னா எனக்கு சான்ஸே கிடையாது. ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. அதன் பின்னர் அண்ணா எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்தார். பின் ஷாருக்கான் படத்தை தயவுசெய்து பண்ணு, உன் வாழ்க்கை மாறிடும் சொன்னாரு அவர் சொன்னபடியே நடந்துடுச்சு. சோஷியல் மீடியாவில், இவரு, அவர சொல்றாங்க, அவரு இவர சொல்றாங்க அதெல்லாம் ஒன்னும் கிடையாது. சொல்லணும்னா நேரா சொல்லலாம். ஒரு பழமொழி சொல்லுவாங்க ஊர் வாயை அடக்க முடியாது. ஊர் வாயில விழுந்து நம்ம வாழ்க்கையை நடத்துறது ஒரு முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும் அதை எல்லாம் காதுல வாங்குனா ஊர் போய் சேர முடியாது.நான் இப்ப அரசியல் பேசல. நான் அரசியல்வாதியும் கிடையாது. அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனா ஒன்னு சொல்றேன். இன்னைக்கு சட்டசபையில் என்ன நடக்குது என்பதை அஞ்சு வயசு குழந்தை கூட உட்கார்ந்து பார்க்கிற அளவுக்கு இப்போ தகவல்கள் கிடைக்குது. இனிமே யாராவது ‘அரசியல் நம்மளுக்கானது இல்ல’ன்னு சொன்னா, அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. அரசியல் நம்மளுக்கானது” இவ்வாறு அவர் பேசினார்












