ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21. ந்தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் ,நடிகர் விஷால் திடீரென தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாகவும், தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. ஆரம்பத்திலேயே மருது கணேஷ், தினகரன், மதுசூதனன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் விஷாலின் மனுவை ஏற்றுக்கொள்வதில் திமுக, அதிமுக முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.இதனால் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி இரண்டரை மணி நேரமாக நிறுத்தி வைத்திருந்தார். வேட்பு மனுவை தொகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் முன் மொழிய வேண்டும். அதில் இரண்டு நபர்கள் பெயர், விபரங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாக தெரிவித்து திமுக, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேட்பு மனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனால் ஆவேசமடைந்த விஷால்,இதையடுத்து தேர்தல் அலுவலகத்துக்கு வந்து அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் காவல் அதிகாரிகள் அவரை தேர்தல் அதிகாரியிடம் பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விஷால் தன்னிடம் உள்ள ஆதாரங்களை (ஆடியோ ஒன்றையும்) சமர்பித்தார். இதையடுத்து மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் உத்தரவின் பேரில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.