நடிகர் சூர்யா உயரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக சூர்யா ரசிகர்கள் இன்று காலை அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கே.வி.ஆனந்த் இயக்கும் ‘சூர்யா 37’ படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் தகவல்கள் வெளியாகின. இச் செய்தி குறித்து சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளினிகள் இருவர், சூர்யா குறித்து பேசுகையில், “அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு… அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்” என அவரது உயரத்தை கிண்டலடித்து பேசியது திரையுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.நடிகர்கள் விஷால், கருணாகரன், இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோரும்கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இன்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அலுவலகம் முன் கூடினர். தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து கண்டன கோஷம் எழுப்பினர். உயரம் முக்கியம் அல்ல உயர்ந்த உள்ளமே முக்கியம் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இந்நிலையில், சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற” என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவரது ரசிகர்கள் கலைந்து சென்றனர்.