பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்(வயது 81) சென்னையில் காலமானார்,அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது.திரையுலகினர் பலரும் திரண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம். இப்படம் 1967-இல் வெளிவந்தது. செங்கல்பட்டின் அருகிலுள்ள ”சித்தமூர்” என்ற சிறிய கிராமமே இவரது சொந்த ஊர். இயக்குநர் ஸ்ரீதருக்கும் இதுவேதான் சொந்த ஊர். ஸ்ரீதர் இவரது அத்தை மகன்.இயக்குனர் ஸ்ரீதரிடம் “மீண்ட சொர்க்கம்”, “கலைக்கோவில்”, “கொடி மலர்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “நெஞ்சிருக்கும் வரை” போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். ”காதலிக்க நேரமில்லை” படத்தின் போது அசோஸியேட் டைரக்டரானார். “அனுபவம் புதுமை” படத்தில் தான் முதன்முதலாக ஸ்லோமோஷன் காட்சிகளை அமைத்தவர் இவர். ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா நடிக்க வைத்து இவர் இயக்கிய “நில் கவனி காதலி” என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.கே.பாலாஜியின் மிகப் பெரிய வெற்றிப் படமான “ராஜா”, “நீதி”, “உனக்காக நான்”, “என் மகன்” போன்ற படங்களையும் இயக்கியவர். அதுபோல் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் “கலாட்டா கல்யாணம்”, “சுமதி என் சுந்தரி”, சிவாஜி, ஸ்ரீதேவி, பிரபு, ராதா நடித்த “சந்திப்பு”, ஆகிய படங்களை இயக்கினார். இம்மூன்றுமே வெற்றிப்படங்கள். மொத்தமாக 60 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான்கு படங்கள் சம்பளமே வாங்காமல் இயக்கியவை. அதற்குக் காரணம் தாம் தொடர்ந்து படங்களை இயக்கமுடியும் என்ற நம்பிக்கையினாலே என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் வெளிவந்த “சங்கிலி” என்ற திரைப்படத்தில் தான் இளைய திலகம் பிரபுவை அறிமுகம் செய்தார்.1993-லிருந்து 4 வருடங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சிவாஜி கணேசனை தனது சொந்தப் படமான “ஒன்ஸ்மோர்” படத்தில் நடிக்க வைத்தார்.
இந்தியில் “ஆராதனா” என்ற பெயரில் வெளியாகி, வெற்றி பெற்ற “ஆராதனா”வைத்தான் “சிவகாமியின் செல்வன்” என்ற பெயரில்சி.வி.ராஜேந்திரன் இயக்கினார்
இவர் தொலைக்காட்சிகளில் பல தொடர்களையும் இயக்கியிருக்கின்றார். முதன் முதலாக நா.பார்த்தசாரதியின் “குறிஞ்சி மலர்”’ தொடரை இயக்கினார். இத்தொடரில் கதாநாயகனாக நடித்தவர் மு.க.ஸ்டாலின். இவர் இயக்கிய “கோகிலா எங்கே போகிறாள்” இன்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது இவருக்குக் கிடைத்தது. தமிழக அரசின் “கலைமாமணி’’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.