பொய்யடியாருக்கு சோதனை வரலாம், மெய்யடியாருக்கு வரலாமா? கிறித்தவ மதமாக இருந்தாலும்ஐயப்பனையும் கண்ணனையும் ஊன் உருகப் பாடுகிறவர் கே.ஜே.ஜேசுதாஸ் .இன்றும் சபரிமலையில் இவரது ‘அரிவராசனம்’பாடல்தான் எதிரொலிக்கிறது.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்குள் போக தடையில்லை. ஐயப்பனை சகதர்மிணியுடன் சென்று வழிபட ஆட்சேபனை இல்லை. ஆனால் குருவாயூர் கோவிலுக்குள் செல்வதற்கு மட்டும் அனுமதி மறுப்பதேன்?
பிற மதத்தவர்க்கு அனுமதிப்பதில்லை என்கிற மனிதன் விதித்த விதி கடுமையாக பின்பற்றப்படுகிறது. முன்னொரு தடவை குருவாயூர் கிருஷ்ணன் ஆலயம் சென்ற ஜேசுதாசை வழியிலேயே மறித்து விட்டார்கள்.அவரும் ஆலய வாசலில் நின்றவாறே பாடி வழிபட்டு விட்டு திரும்பச்சென்றுவிட்டார்.
தற்போது பிரச்னை தலை தூக்கி இருக்கிறது.
அழகாக தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
“பகவான் கிருஷ்ணனை தரிசிப்பதற்கு நிற்கும் வரிசையில் கடைசி ஆளாக நிற்கவும் தயார். எனக்காக சிறப்புச்சலுகை எதுவும் தேவை இல்லை.கேட்கவும் இல்லை. ஆலய நிர்வாகம் முடிவு செய்யட்டும். குருவாயூர் கிருஷ்ணனை வழிபடாமல் இதர கிருஷ்ணன் ஆலயங்களுக்கு செல்வதில்லை என சபதம் செய்திருக்கிறேன். பகவானை நெஞ்சில் வைத்துப் பூசிப்பவன் நான். எனக்கு இந்த சோதனையா?” என கேட்டிருக்கிறார் ஜேசுதாஸ்.
இதுவும் ஒரு தீண்டாமைதான்!