‘அம்மிக்கல்லே அம்பது ரூபா. கொத்துற கூலி இருவத்தி அஞ்சு ரூபாயாம்’ ஊர் பக்கம் சொலவடை சொல்வார்கள். அதை போன்ற கதையைத்தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்கிறார் என்றாலும் இதுநாள் வரை கொடுத்து வந்தவர்களுக்கு தற்போது ஏன் இந்த கோபம்? குற்றம் சொன்னவர் அந்த நடிகரின் பெயரை சொல்லி இருக்கலாம்.அதை விடுத்து “நான் ஐதராபாத் போகிறேன்.அங்கே ஆபீஸ் ரெடி”என சொல்வதற்கு என்ன காரணம்?
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸின் ‘என் பெயர் சூர்யா ,என் வீடு இந்தியா’ என்கிற படத்தின் முன்னோட்டத் தகடு வெளியீட்டு விழா பிரசாத் லேப் பில் நடந்தது. அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருக்கிறார்.ஸ்ரீ ஷா ஸ்ரீ தர் லகடபாடி தயாரித்திருக்கிறார்.சக்தி பிலிம் பாக்டரி தமிழ்நாடு முழுமையும் ரிலீஸ் செய்கிறது.
“நடந்து முடிந்துள்ள வேலை நிறுத்தம் சிலருக்கு சுயமாக சிந்திப்பதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறது. அதில் நானும் ஒருவன்” என தனது போதி மரத்து அனுபவத்தை சொன்ன பிரபல தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா மேலும் பல தகவல்களையும் சொன்னார்.
‘நடிகர்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்வதற்காக குழு போடலாம்’ என்பதை கார்த்திதான் முன் மொழிந்திருக்கிறார். நூறு கோடி பட்ஜெட் படத்துக்கு ஹீரோ சம்பளம் ஐம்பது கோடி என்றால் என்னாவது?
ஒரு நாளைக்கு காமடி நடிகர் ஒருவர் 2 லட்சம் சம்பளம் பிளஸ் ஜி.எஸ்.டி கேட்கிறார். வாங்குகிற சம்பளத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். நடிகர் சங்கத்தலைவர் நாசர்,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இருவரும் சேர்ந்து சரி செய்யவேண்டும்.
ஒரு வருசத்தில் நிலைமை சீரடையாவிட்டால் நான் ஆந்திரா போய் விடுவேன். ஏற்கனவே அங்கு ஆபீஸ் வாங்கி போட்டுவிட்டேன். அங்கு தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. இண்டஸ்ட்ரிக்கும் நடிகர்களுக்கும் ஒத்த மனப்பான்மை ஆந்திராவில் இருக்கிறது. இங்கு இல்லை” என்றார் ஞானவேல் ராஜா.