
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று காலை நடந்த போராட்டத்தில்,போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது . இச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திரையுலகினரும் இச் சம்பவம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் .
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,’மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு – தலைவர் ரஜினிகாந்த்
— ரஜினி மக்கள் மன்றம் .
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இச் சம்பவம் குறித்து கூறியதாவது,
‘மக்கள் வாழும் பகுதியை மாசுபடுத்திக்கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் இத்தகைய துப்பாக்கிச்சூடு நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளை மட்டுமே பழிவாங்கிவிட கூடாது. மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என்பதே தமிழகத்தின் கேள்வி.அரசு வன்முறையும் கண்டிக்கத்தக்கதே. பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் சத்யராஜ் தனது கண்டனத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது,
“தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேரின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கே வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் நமக்கு முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நெஞ்சை பதைக்க வைக்கிறது. நெஞ்சை மிகவும் வேதனைப்படுத்துகிறது.இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக.” என்று கூறினார் .

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
“மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆலையை மூட வேண்டியது தானே. இவ்வளவு பிரச்சனை நடக்கும் போது கலெக்டர் எங்க போனார். அதிமுக ஆட்சியில் யாரும் நிம்மதியாக ரோட்டில் கூட நடந்து செல்ல முடியவில்லை. அவ்ளோ பாவம் பண்ணிருக்கீங்க” என நடிகர் மயில்சாமி கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அவசர அறிக்கையில் கூறியிருப்பதாவது,’தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட கூறி 100 நாட்களாக அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது இன்று போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது. 10பேர் உயிரிழந்து ,பலரும் காயம்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாக இருக்கிறது.இந்த துப்பாக்கி சூட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது.

கடந்த மாதம் வள்ளூவர் கோட்டத்தில் சினிமா துறையின் சார்பில் நடைப்பெற்ற அறவழிப்போராட்டத்தில் ஸ்டார்லெட் ஆலை மூட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி சினிமா துறையை சேர்ந்த 5 ஆயிரம் தொழிலளர்களிடம் கையெப்பம் பெற்று ஆளுநரிடம் மனு கொடுத்தோம். மக்கள் போராட்டம் வலுவடைந்திருக்கிற நிலையில் இனியும் தாமதிக்காமல் ஸ்டார்லெட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.