‘பரதேசி’யில் அதர்வா முரளியை மிரட்டி, விரட்டி, காதலித்த நாட்டுக்கட்டை அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகாகுமார்.
தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதிக்கும் கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் எடுத்துவரும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். ” த பாடி ” என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.
இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
பாலிவுட் படவாய்ப்பு குறித்து கேட்டபோது, “இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி” என்றார் வேதிகா. 

வேதிகா தேர்வு செய்யப்பட்டது குறித்து, நாடு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பல ஆடிஷன்களுக்கு பிறகு தங்களிடம் வேதிகா சிக்கியதாக கூறுகிறார் இயக்குனர் ஜித்து ஜோசப். 

“அப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அவருக்கு அழகாக பொருந்துகிறது .இம்ரான்- வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும்” என்கிறார் இயக்குநர்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் மும்பையில் தொடங்கியது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரீஷியசில் விரைவில் தொடங்கவுள்ளது.