வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம் – EXAM’ இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி – இயக்குநர் ஏ. சற்குணம் – துஷாரா விஜயன் – அதிதி பாலன் – ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில்,
” சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.
நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்… அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு… ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.
நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து… பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர். இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்… உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் …ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும். இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்” என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில்,
‘ இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.
எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட். புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.
ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால் கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்….ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம். நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள். அதுபோன்ற கதை தான் எக்ஸாம். இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.
இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை அதிதி பாலன் பேசுகையில்,
” மரமல்லி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி. மரமல்லி கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்) அடித்துக் கொண்டோம்.
இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின் மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார்.












