
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
கதை என்ன?
நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றிதான் படம் பேசுகிறது.
தற்போது காடுகளின் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசாங்கம் முழு மூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் மரகதக்காடு படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச் சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கின்ற கருத்தை மையமாக வைத்தே மரகதகாடு படத்தை இயக்கியுள்ளேன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்து வரும் இயற்கை அழிவைப் பற்றி தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.
இதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அது தான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும். பசுமை வழிச் சாலையின் அறுபது சதவீதம் சாலை காடுகளுக்குள் தான் அமைய இருக்கிறது.
காடுகளை ஒட்டி நகரங்களும் சாலைகளும் உருவாகும்போது யானைகளும் வன விலங்குகளும் ஊருக்குள் வருவது அதிகரிக்கத்தான் செய்யும்.
இயற்கையை பாதுகாக்காமல் வருகின்ற எந்த வளர்ச்சியும் மனிதனைப் பாதுகாக்காது. அழிவுக்குத் தான் அழைத்துச் செல்லும்.
சாலைகளோ தொழிற்சாலைகளோ வேண்டாம் எனக் கூறவில்லை.
இயற்கையை அழிக்காமல் மாற்று வழிகளில் அதை அமைக்க வேண்டும். ஒரு அரசாங்கமே காடுகளை அழிக்கும் செயலை முன்னின்று செய்யக்கூடாது.
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விசுவாசமாக இல்லை.
அரசாங்கம் இயற்கையை வணிகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதன் காரணமாகத்தான் விளை நிலங்களில் கூட தொழிற்சாலை கட்ட கிளம்பி வருகிறார்கள்.
அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்களின் பை நிரம்பினால் போதும்மக்களின் சுவாசப்பை என்ன ஆனால் என்ன? என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல் மாறிவருகிறது..
இதைவிட கொடுமை என்னவென்றால் காகிதமற்ற பரிவர்த்தனை செய்வோம், அதன் மூலம் மரங்களைக் அழிக்காமல் காப்போம் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை அழிப்பது அரசாங்கத்தின் இரு முகங்களை அப்பட்டமாக காட்டுகிறது.
அதற்காக சமூக விரோதிகள் என பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை.. பதிமூன்று உயிர்களை விலைகொடுத்து தானே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிந்திருக்கிறது..
“என் பிணத்துமேல ஏறி உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்…
உலகத்திலேயே மலிவானது ஏழையின் உயிர் தான். மனித உயிருக்கு விலைவைக்க நீங்கள் யார்?” என்கிற அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இயற்கை அழிப்புக்கு எதிரான குரலை “மரகதக்காடு” படத்தில் பதிவு செய்துளேன்.
அதுமட்டுமல்ல இருக்கிற காட்டை, யார் அழித்தாலும் கோபம் வரணும்.. அந்த தார்மீகக் கோபத்தை என் படம் உருவாக்கும்.
8 வழிச் சாலையை எதிர்க்கும் மக்களாகட்டும் சமூக ஆர்வலர்களாகட்டும் அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகிறார்கள்…
இதில் 8 வழிச்சாலை மக்களை .. அவர்களின் உணவு ஆதாரத்தை .. இயற்கையை அதன் கனிம வளங்களை சூறையாடிவிட்டு… ஆண்டுக்கணக்கில் வேர்விட்டிருக்கும் மரங்களை வேரோடு பிடுங்கிவிட்டு வளர்ச்சிப் பணி என்று பெயரிட்டுக்கொள்வது இந்நாட்டின் எதிர்காலத்தை அந்த மண்ணின் வளத்தை அழித்துவிட்டுச் செய்யும் அரசாங்கத்தின் சுயநலமான வளர்ச்சித்திட்டம் என்றே சொல்வேன்.
ஒரு அரசாங்கத்தின் ஆயுள் 5 வருடம்தான். ஆனால் அவர்கள் நாம் சிறுபிள்ளையிலிருந்து பார்த்து பேணிவரும் வளங்களை எடுக்கும்போது.. மக்களதிகாரத்திற்குட்பட்டே வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.”என்று கூறுகிறார்.