எவ்வளவு நேரம்தான் தாக்குப் பிடிக்க முடியும்?
புல்லட்டுகள் தீர்ந்து கொண்டிருந்தன.
20 நிமிடம் கடுமையான சண்டை
தொடர்ந்து சுடுவதற்கு ரவைகள் போதாது.தப்பிச்செல்வதுதான் ஒரே வழி! போகும் உயிர் எப்படிப்போனால் என்ன…..துணிந்து ஜீப்புக்குள் பாய்ந்த அர்ஸ் வேகம் வேகமாக இயங்கி ஜீப்பை ரிவர்சில் கிளப்பினார்.சந்திரப்பாவும் தொற்றிக்கொள்ள அதிரடியாக யூ டர்ன் அடித்தார். 12 அடி அகலமுள்ள சாலையில் துணிந்துதான் டர்ன் அடித்தார்.சற்று மிஸ் ஆகியிருந்தாலும் கிடு கிடு பள்ளத்தில் பாய்ந்திருக்கும்.
ஜீப் ஹொகேனக்கல் நோக்கி பறந்தது.
“ஹோ..ஹோ”என்ற இரைச்சலுடன் துப்பாக்கிகளை உயரத் தூக்கிப் பிடித்தபடி பாறைகளின் மறைவிலிருந்து வீரப்பனும் மற்றவர்களும் வெளியில் வந்தனர்.மகிழ்ச்சி…துள்ளிக்குதித்தனர்.
வீரப்பன் ,ஆறுமுகம் இருவரின் கையிலும் காயம்.போலீசார் சுட்டபோது பாறைகளில் பட்டுச் சிதறியதில் ஏற்பட்ட காயம்.
“எத்தனை நாய்ங்க எமலோகம் போச்சோ…ராத்திரி ரேடியோவ்ல சொல்வானுங்களா…..பேப்பர்காரப்பயலுக பொய் போட மாட்டாங்கடா ! “என்ற வீரப்பன் அவனாகவே பேசிக்கொண்டு வந்த வழியே திரும்பினான்.
அத்தனை பேருக்கும் எதிரி நாட்டை வீழ்த்தி விட்டது போல சந்தோசம்.
தாக்குதலின் போது போலீசார் விட்டுச்சென்ற பிஸ்டல் பாறை ஓரமாக கிடந்தது.சேத்துக்குளி எடுத்துக்கொண்டான்.
வெறித்தனமான தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த சந்தோசம் வீரப்பனை எங்கேயோ கொண்டு போய் விட்டது.தன்னை எந்தப்படை வந்தாலும் அசைக்கமுடியாது என்கிற நம்பிக்கை மேலும் அழுத்தமாக பதிந்தது.கை கால்களை கட்டிப்போட்டிருந்த இருவரையும் எச்சரித்து விரட்டி விடும்படி ஆத்தூர் கோபாலிடம் சொல்லிவிட்டு இருப்பிடம் நோக்கி நடந்தான் ..நடந்தனர்,!
ஜீப்பை ஓட்டிய அர்சுக்கு வலது கையில் காயம்.ரத்தம் வழிகிறது.கண்களை செருகிக்கொண்டு வந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தைரியத்தை இழந்து விடாமல் ஓட்டிக்கொண்டிருந்தார்.அதிர்சியில் இருந்து சந்திரப்பா மீளவில்லை. பிரமை பிடித்தவரைப் போல் உட்கார்ந்திருந்தார்.
காவேரிக்கரையை அடைந்தபோது இரவு எட்டுமணியைத்தாண்டி இருந்தது..
பெட்ரோல் காலி! ஜீப் முழுவதும் ஓட்டைகள்.
ஜீப்பின் உள்பகுதியைப் பார்ப்பதற்கு அர்ஸ் பயந்தார்.அங்கு இருந்தவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களா?இருட்டில் எதுவும் தெரியவில்லை.காவிரிக்கரை….ஊரும் கிடையாது.ஒரே இருட்டு.கதறுவதைத் தவிர வேறு வழி இல்லை !தனிமை! குண்டடிபட்ட வலி .என்ன ஆவமோ என்கிற பயம்.மெதுவாக செத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு..இருந்தாலும் கடவுள் உதவி செய்வார் என்கிற நம்பிக்கை.
கிருஷ்ணா அர்ஸ் கத்தினார்.
“யாருமே இல்லியா. நாங்க போலீஸ்.வீரப்பன் எங்களை சுட்டுட்டான். உதவி செய்ய வாங்க..வாங்க!”
எந்திரப்படகு ஓட்டும் நரஸப்பா என்பவர் உதவி செய்ய வந்தார்.நதியின் எதிர்க்கரையில் அவரின் குடிசை! ஜீப்பைப் பார்த்ததும் நஞ்சப்பாவினால் பேச முடியவில்லை.
வித்யராணியபுரம் எஸ்.ஐ ஜெகநாதன், மாதேஸ்வரம் மலை எஸ்,ஐ.தினேஷ் இருவரும் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தனர் .கான்ஸ்டபிள் சங்கரும் உயிருடன் இல்லை.டார்ச் லைட் விளக்கில் அப்போதுதான் கிருஷ்ணா அர்ஸ் பார்க்கிறார்.இதயம் நின்று பிறகு இயங்கியது.
குற்றுயிரும் குலை உயிருமாக மயங்கிகிடந்த மற்றவர்களை அர்சும் நஞ்சப்பாவும் படகுக்கு மாற்றினர்.படகு ஹொகேனக்கல் நோக்கி விரைந்தது. நள்ளிரவில் போய்ச்சேர்ந்தனர்.
போலீஸ் நிலையத்தில் ஆன் டியூட்டியில் ஏட்டு சபாபதி இருந்தார்.
அரசை தாங்கியபடி ஸ்டேஷனுக்குள் போனார் நஞ்சப்பா.
நடந்த சம்பவங்களை சபாபதியிடம் சொன்னார் அர்ஸ். உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக தர்மபுரிக்கு அனுப்பி வைத்தனர்.
மைசூரில் இருந்த எஸ்.பி.பிபின் கோபாலகிருஷ்ணாவுக்கு டிரங்கால் போட்டு நிலவரத்தை சொன்னார் அர்ஸ்.
“சார்….தினேஷ்,ஜெகநாதன்,ராமலிங்கம் மூணு பேரும் என்கவுண்டர்ல செத்துட்டாங்க. சங்கர்ராவ் சீரியஸ்.இன்னும் அஞ்சு பேர் கஷ்டம்தான். நாங்க ரொம்பவும் மோசமா தாக்கப்பட்டிருக்கிறோம்.”
அதுவரை அழாமல் இருந்த அர்ஸ் அப்போதுதான் கதறி அழுகிறார்.
நாளை ….பிளாக் ஷிப் யார்?