கடைக்குட்டிசிங்கம் பிளாக் பஸ்டர் சக்சஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாண்டிராஜ் வழக்கம் போல் எமோஷனல் ஆகி விட்டார். படத்தில் இடம் பெற்றிருந்த ரேக்ளா ரேஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. தணிக்கை நேரத்தில் இந்த காட்சியில் கை வைக்கவேண்டும் என்று வழக்கம்போல பீட்டா என்கிற அமைப்பு கொடி தூக்கி இருந்தது. எப்படியோ 2 டி ராஜசேகர் போராடி அனுமதி வாங்கி விட்டார்.இதை நினைவுக்குக் கொண்டுவந்த பாண்டிராஜ் ஒரு வாங்கு வாங்கி விட்டார்.
“மேனகா காந்தி யாருங்க? அவங்களுக்கு நம்ம கலாசாரம் பற்றி என்ன தெரியும்? நமக்கு இல்லாத அக்கறையா அவங்களுக்கு? நாம்ப சாமியா மாட்டை கும்பிடுறோம் .நேரா நேரத்துக்கு தீனி போடணுமே என்கிற கவலை நமக்குத்தான் இருக்கு! நட்சத்திர ஹோட்டலில் சிக்கன் சிக்ஸ்டிபைவ் சாப்பிடுகிறவர்களுக்கு என்ன கவலை இருக்கப்போகிறது? “என்று விடு விடு என விட்டார். அப்படியே ஆங்கில பத்திரிக்கை விமர்சகர்களுக்கு ஒரு இடி!
“தமிழ்க் கலாசாரம்,கிராமத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு எழுதுங்க” படத்தின் தமிழக விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில் “இந்தப்படத்தின் வெற்றிய பார்த்துவிட்டு பல தியேட்டர்காரர்கள் தங்கள் தியேட்டர்களை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்கள்”என்பதாக சொன்னார். சூர்யா ,கார்த்தி, பாண்டிராஜ் ,ராஜசேகர பாண்டியன் ஆகியோருக்கு தங்கச்சங்கிலி அணிவித்தார். சூர்யா தனக்கு அணிவித்த சங்கிலியை திருப்பி சக்தி வேலனுக்கே அணிவித்து விட்டார்.