அந்தக் காலத்திலிருந்தே அரசியலில் பொதுக்குழு என்றால் குழப்பம் இருக்கும் என்பது எழுதப்படாத விதி. நடிகர் சங்கம் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா? அதுவும் ரித்தீஷ் ,எஸ்.வி.சேகர் போன்றவர்கள் எதிர்ப்பாளர்களாக இருக்கிறபோது அமைதிக்கு இடம் இருக்குமா? பார்க்கலாம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட்19-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.
பொதுக் குழுவில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.
பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்த துணைத் தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட வரவு-செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார் . பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் உரை நிகழ்த்த பொதுச்செயலாளர் விஷால் கடந்த கால நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி ஒப்புதல் பெறுவார் .
இந்த கூட்டத்தில் 2018-2021ஆண்டுக்கான தேர்தல் குறித்தும் முடிவெடுக்கப்படும்.
தலைவர் நாசர் தலைவர் உரை ஆற்றியபின்னர், துணைத்தலைவர் பொன்வண்ணன் நன்றி உரையுடன் பொதுக்குழு நிறைவடையும் .
உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழுவில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அன்று ஒரு நாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பொதுக்குழுவில் விவாதிக்கப்டும் விசயங்கள் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் நாளை சென்னை நட்சத்திர ஒட்டலில் கூடி முடிவெடுக்கவுள்ளனர்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இதற்கிடையே பொதுக்குழுவில் ,நீக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் குறித்தும்,.நாடகநடிகர்கள் நீக்கம்மற்றும் நடிகர் சங்கக்கட்டிடம் குறித்தும் விஷால் எதிர்ப்பாளர்கள் பிரச்சனை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.