கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை ‘குரூப் கம்பெனி’ நிறுவனம் சார்பில் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரித்திருந்தார். இப்படம் சம்பந்தமாக தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கார்த்திக் சுப்பராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை தனக்கு தெரியாமல் தயரிப்பாளர் விற்க முயற்சி செய்வதாகவும், இப்படத்தின் காப்பிரைட்ஸ் தன் வசமே இருப்பதாகவும், இத்திரைப்படத்தை இயக்கிய வகையில் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி 40 லட்சம் கோரி வழக்கு தாக்கல் செய்தார். கடந்த 21-5-2015-ஆம் தேதி தனது காப்பிரைட்ஸ் உரிமையையும், ஹிந்தி மொழி உட்பட அனைத்து மொழி மாற்று உரிமையையும் தயாரிப்பாளர் கதிரேசன் வேறு எவருக்கும் விற்க கூடாது என்றும் தடை உத்தரவை வாங்கியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்!இந்த நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். இதில் ‘ஜிகர்தண்டா’ படம் மீது போடப்பட்ட தடை உத்தரவை நீக்க கோரி கேட்டுக் கொண்டிருந்தார் கதிரேசன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘ஜிகர்தண்டா’ படம் சம்பந்தமாக போடப்பட்டிருந்த தடையை நீக்கியது. இதனை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக இந்நிறுவனத்தின் நிர்வாகி கலைச்செல்வி கூறியுள்ளார்.