பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு (வயது 87) கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. சில மாதங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த அவர், அதன்பிறகுதான் ‘சுவடுகள்’ படத்துக்கு இசையமைத்தார். வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.கடந்த மாதம் 20–ந் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். கடந்த 24 நாட்களாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.15 மணிக்கு மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் மருத்துவ மனையில் இருந்து சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரையுலகினர்அஞ்சலி
நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், சரத்குமார், பிரபு, விஜய், விஷால், வடிவேல், நாசர், விவேக், ராஜேஷ், பாண்டியராஜன், சார்லி, சின்னிஜெயந்த், தாமு, நடிகைகள் குஷ்பு, எம்.என்.ராஜம், வடிவுக்கரசி, பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எஸ்.தாணு, கேயார், கோவை தம்பி, டி.சிவா, பி.எல்.தேனப்பன், பி.டி.செல்வகுமார், டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, வசந்த், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், விஜய் ஆண்டனி, அனிருத், கார்த்திக் ராஜா, பவதாரணி, பின்னணி பாடகர்கள் ஜேசுதாஸ், எஸ்.பி.சரண், உன்னிகிருஷ்ணன், சீனிவாஸ், பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், டி.கே.கலா, ‘பெப்சி’ ஜி.சிவா உள்பட ஏராளமான திரை உலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அரசியல் கட்சி தலைவர்கள்
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, டாக்டர் ஜெயவர்தன் எம்.பி. பா.வளர்மதி ஆகியோர் விஸ்வநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. சார்பில் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., திராவிடர் கழகம் சார்பில் கட்சியின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத்தலைவர் வானதி சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன் ஆகியோரும் விஸ்வநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிச்சடங்குகள் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. 9 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. இசை கலைஞர்களின் இசை அஞ்சலியுடன் காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது.
மரணம் அடைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி. இவர், ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு கோபி, முரளிதரன், பிரகாஷ், ஹரிதாஸ் என்ற 4 மகன்களும், லதா, மது, சாந்தி என்ற 3 மகள்களும் இருக்கிறார்கள்.