
கிராமத்துப் பக்கம் சொலவடை சொல்வார்கள் ‘பேஞ்சும் கெடுத்துச்சு,காஞ்சும் கெடுத்துச்சு ‘என்று.!
புயல் வந்தால் விவசாயிகளுக்கு அடி வயிறு வலிக்கும். சினிமாக்காரர்களுக்கு அங்கமெல்லாம் எரியும். வேளாண்மையில் விளைச்சலுக்கு சேதம், தியேட்டர்காரர்களுக்கு வசூலில் பலத்த அடி.
இந்த ‘கஜா’ புயல் வலுவிழந்து போனாலும் கன மழை, பலத்த காற்று என்று தன்னுடைய கை வரிசையை காட்டிவிட்டுத்தான் போகும் என்கிறார்கள்.
கஜா கரையைக் கடக்கும் நாளான நாளை வெள்ளிக்கிழமையன்று மூன்று படங்கள் வெளியாகின்றன.
காற்றின் மொழி, உத்தரவு மகராஜா, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் தனஞ்செயனின் காற்றின் மொழி எதிர்பார்க்கப்படுகிற படம். ஜோதிகா நடித்துள்ள இந்த படத்தின் பாட்டுகள் பிரபலமானவை.
தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிப் போய் இந்த வாரம் வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒழுங்கு முறை குழுவுக்கு பெப்பே காட்டி விட்டு வெளியாகிற படம்.
நகுலின் ‘செய்’ படமானது இவ்வளவு போட்டிக்கு மத்தியில் வரவேண்டாம் என்று வருத்தப்பட்டு தள்ளிப் போய் விட்டது.
பாண்டிச்சேரி,விழுப்புரம்,கடலூர், சிதம்பரம்,கும்பகோணம்,தஞ்சாவூர்,தூத்துக்குடி ஆகிய ஏரியாக்களின் மழை நிலவரத்தைப் பொறுத்து தியேட்டர்களுக்கு மக்கள் வரக்கூடும். ஜோதிகாவின் படம் என்பதால் சூர்யாவின் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலம். இன்று மாலையில் பெய்யும் மழையின் நிலவரம் நாளை வெளியாகும் படங்களின் நிலையை வெளிப்படுத்திவிடும்.












