திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிய படம். விருது பெற்ற படம் என்றாலே மக்களிடம் மாறுபட்ட கருத்து இருக்கிறது. பேசிக்கிட்டே இருப்பாங்க.அழுதுகிட்டே இருப்பாங்க,மெதுவா நகரும் என பலவித கருத்துகள் .ஆனால் நமக்கே நடக்கிற நிகழ்வாக இந்தப்படம் நம்மை கடத்துகிறது,
நிரந்தர வேலையில்லாத ஒரு கதாசிரியன்.அவ்வளவாக புகழ் இல்லை. விளம்பரங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது , சண்டைக் காட்சிகளில் ‘ஆ… ஊ,..ஹா ‘என டப்பிங் சவுண்டு கொடுப்பது இப்படிதான் வருமானம் வருகிறது. மனைவி,மகன் ,என சின்ன குடும்பம்.வாடகை வீடு. ஏதோ ஓடுகிறது. திடீரென ஹவுஸ் ஓனர் வீட்டை காலி செய்யும்படி சொல்ல வீடு தேடும் படலம். படும் துயரங்கள்., கடைசியில் நகரத்தை விட்டு வெளியேறுகிற நிலை.இதுதான் கதை.
நம்மில் பலர் அனுபவித்திருப்பார்கள்.கதையின் கேரக்டர்களை கதாசிரியர்,இயக்குநர் செழியன் கொண்டு சென்றிருக்கிற வழி ஒரு துணை இயக்குநரின் நிலையை உணர்த்துகிறது.
“என் புருசனும் கச்சேரிக்குப் போகிறான்” என்பதைப் போல கதாநாயகனின் வாழ்க்கை. அவனது சிறந்த கற்பனை விலை போகிறது.ஆனால் அதை பெற்றவன் அவன்தான் என்கிற முத்திரை இல்லாமல் வாடகைத் தாய் போல.
இன்றைய சினிமாவில் அதுவும் ஒரு பகுதிதானே! எத்தனை துணை இயக்குநர்கள் சுயம் இழந்து சோற்றுக்காக வாழ்கிறார்கள்!
நாயகன் சந்தோஷ் ஸ்ரீ ராம்,நாயகி ஷீலாராஜ்குமார் இருவரும் கதைக்காகவே வார்க்கப்பட்டவர்கள் போல அத்தனை யதார்த்தம்.சின்ன சின்ன சண்டைகள்,அது வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து விடாமல் அனுசரித்துப் போகும் பாங்கு அருமை.
இன்று ‘கூடலாம்’ என்கிற நாயகியின் மனநிலையை திரைப்பட பாடல் வழியாக உணர்த்துவதும் அதை ஏற்கும் மனநிலை இல்லாமல் மருகும் நாயகன் வெதும்புவதும் சூழ்நிலைக் காயங்கள்.
ஒளிப்பதிவாளர் செழியன் கதாசிரியர் -இயக்குநராக இருப்பதால் காட்சிகளில் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தை தெரிகிறது. ஒலிப்பதிவு சூப்பர். இசை அமைப்பாளர் என யாரும் இல்லை.குருவிகள்,வானொலி பாடல்கள்,தெரு சப்தங்கள் என இயற்கையாக இருக்கிறது.
நல்ல படம்.