இயக்குநர் பாலா என்றால் தமிழ்ச்சினிமா நடிகர்கள் மிரண்டு போவார்கள்.
அடிப்பார்,திட்டுவார் ,கடுமையாக வேலை வாங்குவார் என்றெல்லாம் சொல்வார்கள். விஷால்,சசிகுமார்,ஆர்யா இவர்களைக் கேட்டால் விளக்கமாக சொல்வார்கள்.
20 வருட திரை உலக பயணத்தில் பத்து படங்களைக்கூட இயக்கவில்லை என்றாலும் பாலு மகேந்திராவின் முரட்டு சிஷ்யனாகவே இன்னமும் இருக்கிறார்.
அர்ஜுன் ரெட்டி என்கிற தெலுங்கு படத்தை சீயான் விக்ரமின் மகன் துருவ்க்காக ரீமேக் செய்வதற்கு இணங்கி வர்மா என்கிற பெயரில் படமாக்கினார். விமானத்தில் போன நவகிரகங்களையும் மொத்தமாக இறக்கி வைத்தது போலாகி விட்டது.
“குப்பையாக இருக்கிறது” என்று தயாரிப்பு தரப்பு வர்மாவை தூக்கி வைத்து விட்டது.
எந்த இயக்குநருக்கும் இப்படி ஒரு இழிநிலை ஏற்பட்டதில்லை.சுருண்டு போனார். படைப்பாளி சுயம் இழப்பதில்லை என்கிற வெறியுடன் கிளம்பி விட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறை கேட்கும் தின நிகழ்ச்சியை கவனித்தார்.
“அடுத்து எடுக்கும் தனது படத்துக்காக இந்த நிகழ்ச்சியை கவனிப்பதற்காக வந்ததாக”அங்கிருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அவரது படத்தின் நாயகனாக நடிக்கவிருப்பது புதுமுகமா, அல்லது புகழ் முகமா?