தொகுதிகள் அறிவிப்புகள் வெளியாகி விட்டன.
அதிமுக,திமுக ஆகிய கட்சிகளுக்கு கவர்ச்சிமிகு பேச்சாளர்கள் இருக்கிறார்கள். நடிகர்களும் இருக்கிறார்கள். பிரசாரத்துக்காகவே இணைக்கப்பட்ட நடிகர்களும் இருக்கிறார்கள்.
அவர்களை கணிசமான தொகைக்கு வந்தவர்கள் என்பதாக சொல்லுகிறார்கள். கூட்டம் சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுவார்கள். அவர்களது பேச்சில் ‘மயங்கி’மக்கள் ஓட்டுப் போடப் போவதில்லை.இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு அரசியலும் தெரியாது. ஆனால் காமடி நிச்சயம்.
விஜயகாந்தை திட்டுவதற்காகவே நடிகர் வடிவேலுவை திமுக முன்னர் பயன் படுத்தியது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லையே!
ஆகவே சிந்தனை சிற்பிகளான சினிமா நடிகர்களை விட்டு விடுவோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வீழ்த்தப்படுவாரா?
தமிழகத்தில் அதிமுக தலை தூக்குமா?
புதிய வரவுகளான கமல்ஹாசன்,டி.டி.வி.தினகரன் இருவரது நிலை என்ன ஆகும்?
கேப்டனை நம்பி இருக்கும் தேமுதிக.கரை சேருமா அல்லது கவிழுமா?கேப்டனுக்காகவே கட்சியில் இருந்த ரசிகர்கள் இன்று கசந்து போய் இருக்கிறார்கள். கேப்டனால் பேசவும் முடியாது.சுற்றுப்பயணம் பண்ணவும் முடியாது. இவைகளையும் தாண்டி கேப்டனை காட்சிப் பொருளாக ஊர் ஊராக கூட்டிச்சென்றால் உடல் நலம் இடம் கொடுக்குமா?
பாமக வினால் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்கப் போவதில்லை. அந்த கட்சியின் நம்பிக்கையே அதிமுக,,தேமுதிக.
ஆனால் மாற்றம் முன்னேற்றம் என்று அதிமுகவை கொத்துப்பரோட்டா போட்ட பாமகவை அதிமுக தொண்டர்கள் ஆதரிப்பார்களா?
எல்லாமே வேட்பாளர்களின் பையில் இருக்கிறது.அது கைக்கு வந்தாலும் நசுக்கப்பட்டுள்ள விவசாயிகள் கை கொடுப்பார்களா?,
பொள்ளாச்சி காமக்கொடூரன்களின் கோர விளையாட்டினால் வெறுத்துப் போய் இருக்கும் பெண்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்களா?
புதிய வரவுகளான வாக்காளர்கள் அரசியல் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மெரீனா புரட்சி இளைஞர்களை பக்குவப்படுத்தி இருக்கிறது.
அவர்கள் அதிகார மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை. பணம் கொடுத்தாலும் பகிரங்கப்படுத்தும் துணிவு உள்ளவர்கள்.
அதிமுக,திமுக உள்கட்சி துரோகங்களை இவர்கள்தான் சரி செய்ய வேண்டும்.
பார்க்கலாம் என்ன நடக்குமென்பதை!