இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது மிக மகிழ்ச்சியான, கொண்டாட்டமான ஒரு தருணம். அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இசை துறையில் அவரது சேவையை பாராட்டி, ஆசியன் அராப் அவார்டு 2019′ என்ற விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, “எல்லா புகழும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே.! எனது வேலைக்கு சர்வதேச தளத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு கௌரவம். பஹ்ரைன், சௌதி அரேபியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ரஷ்யா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த பிரபலமான பிரதிநிதிகளால் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இது வெறுமனே மகிழ்ச்சியை மட்டும் அளிக்காமல், எதிர்காலத்தில் மிகச் சிறந்த இசையை வழங்கும் பொறுப்பை எனக்கு அதிகமாக்கியிருக்கிறது” என்றார்.
2018ஆம் ஆண்டு ஜிப்ரானுக்கு மிகவும் வெற்றிகரமான ஒரு ஆண்டு.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் மற்றும் சமுத்திரகனியின் ஆண் தேவதை போன்ற நல்ல மற்றும் சவாலான படங்களில் பணியாற்றியிருக்கிறார். அதில் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் மிகவும் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டும் பல்வேறு வகையான கதையம்சம் உள்ள படங்களில் அவர் பணியாற்றுவதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவும், மிகவும் நம்பிக்கைக்குரிய ஆண்டாகவும் இருக்கிறது.
விக்ரம் நடிக்கும் “கடாரம் கொண்டான்”, வைபவ் நடிக்கும் “சிக்ஸர்”, லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”, மலையாள அறிமுகமான “அதிரன்” (பின்னணி இசை), ஹன்சிகாவின் “மஹா”, அபய் தியோலின் இது வேதாளம் சொல்லும் கதை , ஹோம் மினிஸ்டர் (கன்னடம்-தெலுங்கு இருமொழி படம்) இன்னும் சில படங்களிலும் பணிபுரிந்து வருகிறார்.