தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் மாதம் 18 ந்தேதி சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடக்கிறது ,இதில் சரத்குமார்,விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர் இருவருக்குமிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று மாலை சரத்குமார் அணியினர் நடத்திய கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் விஷால் அணியினர் தங்கள் மீது கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில்,நடிகை ராதிகா பேசிய போது, ”தற்போதைய நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முறைகேடு செய்துள்ளனர் என எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி விஷால் அணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் எதிரணியினர் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஆவேசமாக கூறினார். .
ராதிகாவைத் தொடர்ந்து சரத்குமார் பேசியபோது, “விஷால் அணியினர் நாங்கள் முறைகேடு செய்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அனைத்து இடங்களிலும் கூறி வருகின்றனர். இதே நடிகர் சங்கத்தில் அவர்கள் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்த ஆதாரங்களை வெளியே கூறினால் அவர்களுக்குத்தான் அசிங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.