சமுதாயம் சார்ந்த கருத்துகளை சொல்லக்கூடியவர்களில் சூர்யா முக்கியமானவர். ஆளுவோருக்கு எதிராக அமைந்து விடுமோ என்கிற அச்சம் இல்லாமல் உண்மையை சொல்லக்கூடியவர்.
அவரது நீண்ட நாள் படமான “என்.ஜி.கே.”படத்தின் இசை,முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று மாலை நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. சூர்யாவின் ரசிகர்கள் வெகுநாளாக ஆர்வமுடன் எதிர்பார்க்கிற செல்வராகவன் இயக்கி இருக்கிற படம். படத்தில் சாய் பல்லவி,ரகுல்பிரீத் மற்றும் பலர் நடித்திருக்கிற படம் இசை யுவன் சங்கர் ராஜா.
“மனித நேயத்தை என்றைக்குமே பயங்கரவாதம் ஜெயித்து விடக்கூடாது. இலங்கையில் உயிர் நீத்தவர்களுக்காக ஒரு நிமிடம் அமைதி அனுசரிப்போம்” என்று சூர்யா கேட்டதற்கிணங்க அவை ஒரு நிமிடம் மவுனித்தது!
பின்னர் அவர் பேசியதாவது:
“அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்பார்கள். நெடிய வருடங்களுக்குப் பின்னர் அரசியல் சார்ந்த படம் எடுத்திருக்கிறார் செல்வராகவன்.ஒவ்வொரு நாளும் புதுப்படத்துக்கு நடிக்கச்செல்வதைப் போன்ற உணர்வு. ஒவ்வொரு நாளும் நிறைய கற்றுக் கொண்டோம். இன்னும் நிறைய கற்கவேண்டும் என்பதற்காகவே படம் தள்ளிப் போனதோ என்று கூட நினைத்தோம்.
2002-ல் ஒரு போது இடத்தில் நானும் செல்வாவும் சந்தித்தபோது எனக்காக ஒரு படம் பண்ணுய்யா என்று கேட்டேன் .அது இப்போதுதான் பலித்திருக்கிறது. படப்பிடிப்பின் போது ஒரு சப்ஜெக்ட் சொன்னார் .எனக்கு பிடித்திருக்கிறது.அடுத்து ஒரு படம் செல்வாவின் டைரக்சனில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
அவரது ஆளுமை மீது அளவு கடந்த காதல்,நேசம் வைத்திருக்கிறேன். மறுபடியும் உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் செல்வா!
இசை என்பது காலம் கடந்து நிற்பது.யுவன்சங்கர் ராஜா அத்தகைய பாடல்களை நிறைய கொடுத்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனாலும் அவரது பாடலை இன்று கேட்டாலும் என் மகன் அவனை அறியாமலேயே ஆடுகிறான்.பாடலை கவனிக்கிறான்.
சாய் பல்லவிக்கு எவ்வளவு நடித்தாலும் அதில் திருப்தி அடைவதில்லை. சரியாக நடிக்கவில்லையோ என அழுவார். டைரக்டர் அவரை தனியாக அழைத்துச்சென்று பிரமாதமாக நடிச்சிருக்கே என்று சொன்னாலும் திருப்தி அடைவதில்லை. தொழில் அவ்வளவு அக்கறையாக இருக்கிறார்” என்றார் சூர்யா,
படத்தின் ஆடியோவை சிவகுமார் ராஜசேகரபாண்டியன், சோனி நிறுவன அஸ்வின் ஆகியோர் வெளியிட்டார்கள். இந்த படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் “என்ஜிகே வாழ்க வாழ்க “என்கிற கோஷம் நமது காதுகளில் எம்.ஜி.ஆர் வாழ்க என்பதைப் போலவே ஒலிக்கிறது.
மேலக்காத் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்பதின் சுருக்கமே எம்.ஜி.ஆர். சிலர் மருதூர் கோபால ராமச்சந்திரன் என சொல்வார்கள்.
நந்த கோபால கிருஷ்ணன் என்பதின் சுருக்கமே என்.ஜி.கே.
இயக்குநர் செல்வராகவன் திட்டமிட்டேதான் காய்களை நகர்த்தி இருக்கிறார்.