பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் “ஒத்த செருப்பு”. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வேளச்சேரியில் நடந்தது.
இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.என்ன பேசப்போகிறார் கமல் என்கிற எதிர்பார்ப்புடன் வந்திருந்தவர்கள் அதிகம். “ஒத்த செருப்பு இங்க இருக்கு இன்னொரு செருப்பு எங்கே இருக்கு “என்று அவரும் கலகலப்பாகவே பேசினார்.
” எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார்.
ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நான் காந்தியின் ரசிகன்.
நான் சென்ற இடத்தில் என் மீது ஒரு செருப்பு வீசினர். இன்னொரு செருப்பும் என்னை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
தற்போது ஒரு செருப்பு கிடைத்துவிட்டது. மற்றொரு செருப்பு விரைவில் கிடைக்கும்.
அதற்கான தகுதி எனக்கு உண்டு. செருப்பை போட்டவருக்கு தான் அவமானம்”. என்றார்.