
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”.
ஷபீர் இசையத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
“இந்தியாவில் மோடி பிரதமர் ஆனாலும் தமிழ்நாட்டில் தமிழன் எப்போதும் போல புத்திசாலித்தனமாக இருக்கிறான் என்பதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி” என்றார் நடிகர் மயில்சாமி.
“தகுதியுள்ள தமிழர்களின் வரிசையில் வைத்து போற்றப்படும் ஒரு இடத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேடைப்பேச்சில் 42 தங்கப்பதக்கங்களை வென்றவன் நான்.
என்னை காயப்படுத்த வேண்டும் என்று தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் சொன்ன துப்புனா துடைச்சிக்குவேன் என்ற பதில் தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது.
யுகே செந்தில்குமாரைப் பார்த்தால் எந்த கவலையும் பறந்து போய் விடும். என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில் பிளாக் ஷீப்புக்கும் பங்கு உண்டு. சினிமாவுக்கு நான் அன்னியமானவன், இந்த படம் எனக்கு இரண்டாவது படம். சினிமா உலகத்தில் இனிமேல் நாஞ்சில் சம்பத்துக்கு எண்ட் கிடையாது “என்றார் நாஞ்சில் சம்பத்.

“4 வயதில் நான் தென்பாண்டி சீமையிலே பாடலை கேட்டால் தான் தூங்குவேன், 12 வயதில் கீபோர்டு வாங்கி நான் வாசித்த முதல் பாடலும் அது தான். நம்மை அந்த அளவுக்கு பாதித்திருக்கிறார் இளையராஜா. நம் ஆழ்மனதில் பதிந்திருக்கிறார். இந்த படத்திலேயும் இரண்டு இடத்தில் அவர் இசை இருக்கும். என் முதல் படத்தில், என் பாடலை வெளியிட்டவர் சிவகார்த்திகேயன், இன்று அவர் தயாரித்துள்ள படத்திற்கு நான் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சி” என்றார் இசையமைப்பாளர் ஷபீர்.
“தொலைக்காட்சியில் இருந்த என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததில் பெரிய பங்கு மீடியாவுக்கு உண்டு. எனக்கு சினிமாவில் நடிக்கும் கனவு இருந்தது, பிளாக் ஷீப் குழுவுக்கும் குழுவாக ஜெயிக்கும் ஆசை இருந்தது, எங்களின் அந்த கனவை ஒரே படத்தில் நிறைவேற்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவா அண்ணா நான் டிவியில் சாதாரணமாக நிகழ்ச்சி செய்து கொண்டு இருந்தபோதே என் மீது மிகவும் அன்பாக இருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெறும்” என்றார் நடிகர் ரியோ ராஜ்.

“இந்த நாளுக்காக நான் நிறைய ஏங்கியிருக்கிறேன், என் கனவை நனவாக்கியது சிவகார்த்திகேயன் சார். அவர் எங்களுக்கு கொடுத்தது வாய்ப்பு மட்டுமல்ல, எல்லோரிடமும் பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறார். இது ரொம்ப ஜாலியான ஒரு படம். கதை என்பது நாம் பயணிக்கும் வழியில் கிடைக்கும் விஷயங்களில் இருந்து உருவாவது தான். வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து திருடப்பட்ட கதை தான் இது. மொத்த குழுவும் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார்கள். ரியோவை விட்டு விட்டு இந்த கதையை யோசிக்கவே முடியவில்லை. நாயகி ஷிரினுக்கு தமிழ் தெரியாது, ஆனாலும் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். தெளிவா சொல்லிட்டா இசையமைப்பாளர் ஷபீர் சிறப்பான இசையை கொடுப்பார் என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.
“கனா படத்தை ஆரம்பிக்கும்போது நண்பர்களுக்காக செய்தோம். அடுத்து யூடியூபில் கலக்கும் ஆளுமைகளை வைத்து படம் பண்ணனும்னு ஆசை.
தொலைக்காட்சியில் இருந்து வந்தவன் நான், அப்படி தொலைக்காட்சியில் இருந்து வரும் கலைஞர்களை வைத்து படம் செய்யவும் ஆசை. அந்த இரண்டும் இந்த ஒரே படத்தில் அமைந்திருக்கிறது.
என் ஃபோனில் 4 வருடமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல் தான் ரிங்டோன். அதே இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
50க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக். நல்ல இயக்குனருடன் சேர்ந்து வேலை செய்யலாம், ஆனால் நல்ல மனிதருடன் சேர்ந்து வேலை செய்வது அரிது.
நாஞ்சில் சம்பத், மயில்சாமி போன்ற சீனியர்களும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்கள். இந்த குழுவுக்கு யுகே செந்தில் சார் ஒரு கேப்டன் போல வழி நடத்தி சென்றிருக்கிறார்.
கனா படம் மிகப்பெரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது, ஷங்கர் சார் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கனா பட இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த மேடையில் எங்கள் தயாரிப்பு எண் 3ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். அந்த படத்தை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். என்னோட கடந்த படம் சரியா போகல,
ஆனால் அடுத்தடுத்த படங்கள் அப்படி இருக்காது, நல்ல படங்களாக இருக்கும். வெற்றி பெறும்போது அணியாக தெரியும், தோற்கும்போது தனியா இருப்பது போல தெரியும். ஆனாலும் அப்போதும் கூட நிற்பது ரசிகர்களாகிய நீங்கள் தான்” என்றார் சிவகார்த்திகேயன்.
இந்த விழாவில் நடன இயக்குனர் அசார், ஸ்டண்ட் பிரதீப் தினேஷ், ஆடை வடிவமைப்பாளர் தினேஷ் மனோகரன், கலை இயக்குனர் கமலநாதன், படத்தொகுப்பாளர்கள் ஃபென்னி ஆலிவர், தமிழரசன், ஒளிப்பதிவாளர் யுகே செந்தில்குமார், இணை தயாரிப்பாளர் கலையரசு, நாயகி ஷிரின் காஞ்ச்வாலா, பாடலாசிரியர் குமரன் குமணன், தர்ஷன், திபு நினன் தாமஸ், பிளாக் ஷீப் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.