- தலையை நீட்டிய ஒட்டகம் முகாமை ஆக்கிரமிக்கும்.
- அமீனா நுழைந்த வீடு சுத்தமாக துடைத்தெறியப்படும்.
- அரசியல்வாதி நுழைந்த வீடு கோஷ்டிகளை உருவாக்கும்.
இவைகளைப்போல சம்பந்தா சம்பந்தமின்றி அமைச்சர் ஒருவர் தலையை நீட்டினால் சிக்கல் வலுவாகுமே தவிர தீராது.
அண்மையில் தடை செய்யப்பட்ட நடிகர் சங்கத் தேர்தலுக்குக் காரணமே செய்தி தகவல் துறை அமைச்சர் கடம்பூர் ராசு தான் என பேசிக்கொள்கிறார்கள்.
தேர்தலில் நிற்பதற்கு முன்னதாகவே ஐசரி கணேஷ் அமைச்சரை சந்தித்து கன்சல்ட் பண்ணியிருக்கிறார். அமைச்சரின் ஆலோசனைக்குப் பிறகுதான் சங்கரதாஸ் சுவாமி அணி பிறந்திருக்கிறது.இந்த அணியினர் போன இடங்களிலெல்லாம் தேவையான உதவிகளை காவல் துறை செய்து கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.
-
முதல்வர் எடப்பாடியின் நோக்கம் விஷால் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதுதான்!
அரசு தலையீடு இல்லாது போயிருந்தாலே போதும் விஷால் அவரது தோல்வியின் கனத்தை உணர்ந்திருப்பார். வீணாக அரசு தலையிட்டு அவரை பெரிதாக விளம்பரப்படுத்தி விட்டது என்றும் ஒரு சாரார் பேசுகிறார்கள்.
பொதுவாக எந்த அமைப்பிலும் பூசல் இல்லாமல் இருக்காது. தன்னை கவனிப்பதில்லை, உதாசீனப்படுத்துகிறார்கள், போதிய முக்கியத்துவம் அளிப்பதில்ல,..இப்படி சின்ன சின்ன காரணங்கள் கூட பின்னாளில் பெரிதாக்கப்படும். மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் கூட தங்களின் இமேஜ் பற்றி பெரிதாக நினைத்துக்கொள்வார்கள்.
குட்டி பத்மினிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை கூட முந்தைய நிர்வாகத்தினர் நடிகை லட்சுமிக்கு கொடுத்ததில்லை.லட்சுமியும் அதைப்பற்றி கவலைப் பட்டதும் இல்லை. குட்டி பத்மனி சின்னத்திரை சீரியல் தயாரிப்பில்தான் அதிக கவனம் செலுத்துகிறவர். அவருக்கு முக்கியத்தும் கொடுப்பதற்கு காரணம் ஐசரி தான் என்கிறார்கள். ஐசரி விலகியதால் குட்டிபத்மினியும் விலகி அவருடன் வந்து விட்டார்.
கவலைப்பட்டிருக்கவேண்டியது நடிகர் சங்கம்தான்.!.
நடிகை சங்கீதாவுக்கு தனது கணவரை மலேசிய கலை நிகழ்ச்சியில் போதிய அளவு பயன்படுத்திக் கொள்ள வில்லை என்கிற மன வருத்தம் நிறையவே உண்டு.
விஷாலுக்கு எல்லாமுமாக இருந்த நந்தா,அண்ட் கோ பற்றி எல்லோருமே புகார் சொல்கிறார்கள். அரசியல் ரீதியான காரணமும் சொல்லப்படுகிறது.
இப்படி பல பூசல்களைப் பற்றி ஸ்பெஷல் பிராஞ்சு வழியாக அறிந்த அரசு தன்னை ‘புகுத்திக் கொள்ள’ ஐசரி கணேஷை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது.
பாண்டவர் அணியை சார்ந்த பெரும்பான்மையினர் வெற்றி பெறலாம் என்பதால்தான் அரசு தனது அதிகாரத்தை பயன் படுத்தி தேர்தலை ரத்து செய்திருக்கிறது என பா.அணி பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது.