சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’
விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர்..கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.அது வறுமையாக இருக்கவும் வாய்ப்பில்லை. ரைசா இருக்கிறபோது கவலை இல்லை கண்ணுகளா!
‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ மூலம் திரைப்பட தயாரிப்பில் கால் வைக்கிறார்.
ஆழமில்லை சும்மா கால் வையுங்க. சேறு கிடக்கிற இடம் பார்த்து ஒதுங்கிட்டா கவலை இல்லை.
‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’, உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள் தலைமை இணை இயக்குனர் – நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அப்புறம் என்ன விட்டு விளாசுங்க!
பல திரைப்படங்களின் மூலமும், தனது அழுத்தமான நடிப்பின் மூலமும், மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த விஷ்ணு விஷால், முற்றிலும் புதிய கோணத்தில் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
சுவராஸ்யமான வேடங்களில், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூறமுடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது.
அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்.இதாங்க கதை.!
இஸ்லாமிய இளைஞர் கதை என்றதுமே சில அமைப்புகளுக்கு அடியில் ஆணி குத்தியது மாதிரி இருக்கும்.!
பி சி ஸ்ரீராமின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவரும், ‘கிருமி’ புகழ் ஒளிப்பதிவாளருமான அருள் வின்சென்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். குறும்படங்கள், இணைய தொடர்கள், திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் இயங்குகின்ற இசையமைப்பாளர் அஷ்வத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த மாதத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கிறது.