
கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’.
தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர் டிசிவா, தயாரிப்பாளர் பால்டிப்போ கதிரேசன், இயக்குநர் பொன்னி மோகன், நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, நடிகர் ஹலோ கந்தசாமி,நடிகை ஸ்ரீ கல்கி, நடிகர் திலீபன், பாடகர் அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜெய்கிருஷ், ஒளிப்பதிவாளர் ரத்தன் சந்த் , பாடலாசிரியர் தமயந்தி, நடன இயக்குநர் காதல் கந்தாஸ், கலை இயக்குநர் சரவணன் அபிராமன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ‘வாழ்க விவசாயி’ படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

தயாரிப்பாளர் ‘லிப்ரா ‘ரவீந்திரன் சந்திரசேகரன் பேசுகையில்,“இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொள்ளுமாறு நடிகர் அப்புக்குட்டியும், படக்குழுவினரும் சில தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்தனர். அப்போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் படத்திற்கு ‘வாழ்க விவசாயி’ என்று டைட்டில் வைத்திருந்தது பாஸிட்டிவ்வாக இருந்தது. அது எனக்கு பிடித்தது. தற்போதைய சூழலில் விவசாயிகளைப் பற்றி வணிகரீதியான படங்களில் சில இடங்களில் மட்டும் விவசாயத்தைப் பற்றி வசனங்களாக மட்டுமே இருக்கும்.
தயாரிப்பாளரைப்பற்றி எனக்கு முன்பே வேறு வகையில் தெரியும். தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதையை நம்பிப் படமெடுத்திருக்கிறார். அவருக்கு வணிகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்பதையும் பேசும் போது தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அவர்களின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை பார்த்த பின்னர் தான் இந்த படத்தின் தரம் எனக்குத் தெரிந்தது. இப்போதுதான் இப் படத்தை நான் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் சொல்லி விட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. இப்படத்தின் தரமும், கன்டென்டும் எனக்கு பிடித்திருக்கிறது.
இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகம் தான் சிறந்த ஸ்பான்ஸர். இந்த படத்திற்கு வேறு ஒரு தினத்தில் இதனை விட வித்தியாசமான முறையில் விழா ஒன்றை வைத்து வெளியீட்டை அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக படக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்.இந்தப் படத்தை திட்டமிட்டு, விளம்பரப்படுத்தி, நல்லமுறையில் தியேட்டருக்குக் கொண்டு வந்துவிடுவேன்.ஆனால் தியேட்டருக்கு ரசிகர்கள் வருகை தந்து என்னையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் , இயக்குநர், நடனஇயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
வாழ்த்துகள்”என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,“ நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக் கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா?
நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்குஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.பிறகுநாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுஎண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..?அந்தவகை யில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.












