- ‘காதலின் மேன்மை,
- எதிர்பார்க்கும் குணமே!
- துணையின்றி தவிக்கும் மனமே,
- உன் ஆறுதலாலென்னைத்
- தேற்றுவாயோ ,மாதே!
- லவ்!”
டேவிட் அந்தோனி என்பவர் எழுதியது. துணை இழந்தவர்களுக்குத் தான் தெரியும் துயரத்தின் வலி.
ஞாயிறு …விட்டத்தைப் பார்த்தபடி கிடந்த எனக்கு உறக்கம் வரவில்லை.
எழுந்து செய்திகளைத் தேடியபோது வியப்புக்குரிய ,அரிய செய்தி விழிகளில் மாட்டியது.
மூதாட்டியின் பெயர் சுபத்ரா.வயது 88.
முதியவரின் பெயர் சையது.வயது 90.
சுபத்ராவுக்கு இளம் வயதிலேயே திருமணம் .ஆண் பெண் என இரு குழந்தைகள். கணவர் அந்த வயதிலேயே மரணித்துப் போனார்.
யாருமற்ற சுபத்ரா தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். அப்போதுதான் காமனுக்கும் கடவுளுக்கும் விழிப்பு வந்திருக்கிறது.. இவ்வளவு இளம் வயதில் விதவைக் கோலமா?
வேண்டாமே !!
சுபத்ராவின் தந்தையின் நண்பரான சையது நண்பரைத் தேடி அவ்வப்போது வீட்டுக்கு வருவது உண்டு.
சுபத்ராவுக்கு அவரைப் பிடித்துப்போனது. ஆசையை அப்பாவிடம் சொல்ல ஊர் கூடி பதிவுத் திருமணம் செய்து வைத்தது.
காலப்போக்கில் முதல் கணவர் வழியாக பிறந்த பிள்ளைகளுக்கு கல்யாணத்தை செய்து வைத்து விட்டு கணவன் மனைவி இருவரும் வாழ வேலை தேடி வெளியூர் சென்றனர்.29 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் பிரிய நேர்ந்தது.
சையது வடநாடு சென்றார். சுபத்ரா கேரளத்திலேயே இருந்தார். இருவருக்கும் இடையிலான தொடர்பு அற்றுப் போனது. இருவரிடமும் செல்போன் இல்லை.
அவள் என்ன செய்கிறாளோ என அவர் தேய அவர் என்ன ஆனாரோ என இவள் மாய முதுமை வலைக்குள் சிக்கிக் கொண்டனர்.
சுபத்ரா எரா விற்றாள்.அவர் கடை வாசலில் படுத்துறங்கி இரந்து வாழ்ந்தார்.
இவ்வளவுக்கும் ஒரே ஊரில் கொடுங்கல்லூரில்தான் இருக்கிறார்கள்.
உடல் நலமற்று ஒரே மருத்துவமனையில் இருவரையும் சேர்த்தனர்.
பின்னர் சுகம் பெற்றதும் மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் இருவரையும் வெளிச்சம் என்கிற முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டது. அவர்கள் அப்போதும் சந்திக்கவில்லை.
கணவரை நினைத்து நித்தமும் சுபத்ராஅங்கு கண்ணீர் விட அதை சக முதியோர்கள் பேச்சு வாக்கில் சையதுவிடமும் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு வேளை தனது சுபத்ராவாக இருக்குமோ? கிழவருக்கு உள்ளுக்குள் சிறு பொறி .! போய் பார்க்கிறார்.
கிழவியின் கண்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
கிழவரும் விசும்பி விசும்பி அழுகிறார்.
“ஏன் பாட்டி அழறே?” சக கிழவி கேட்க அதற்கு சுபத்ரா “அவர் என்னோட காணாமல் போன புருஷன் மா!”