- பூஜைக்கு வந்த மலரே வா!
- பூமிக்கு வந்த நிலவே வா!
- பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
- பொன் வண்ண மேனிச்சிலையே வா !
- செக்கச்சிவந்த இதழோ இதழோ
- பவளம் பவளம் செம்பவளம் ,
- தேனில் ஊறிய மொழியில் மொழியில்
- மலரும் மலரும் பூ மலரும்.!
என கவியரசர் கண்ணதாசன் எழுதிய கன்னல் வரிகளின் சுவை இன்னும் எத்தனை மாமாங்கம் கடந்தாலும் சுவை குறையப்போவதில்லை. மலைத்தேனுக்கு ஏது எக்ஸ்பயரி தேதி?
இந்த வரிகளை படித்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலி நிர்மலா எம்.பி.பி.எஸ் தான் நினைவில் வந்து போகிறார்.
யார் அந்த காதலி?
அந்த மரியாதைக்குரிய பெண்ணரசி வாழ்த்தி வழியனுப்பிய சிவாஜி ராவ்தான் இன்றைய சூப்பர் ஸ்டார்.
அந்த மகராசி வாழ்த்திய வாழ்த்துதான் இன்று ரஜினியை சூப்பர் ஸ்டாராக மாற்றி இருக்கிறது.
“நீ மண்ணகத்தை ஆளவந்த மன்னனாக வேண்டும். நான் உன்னகத்தை ஆள வந்த ராணியாக வேண்டும்” என ஐநூறு ரூபாயைக் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்த அந்த மகராசியை ” இன்று நான் செல்லுமிடமெல்லாம் தேடுகிறேன். அமெரிக்கா சென்றாலும் ,இமயமலை சென்றாலும் என் கண்கள் நிம்மியைத் தேடுகின்றன” என இன்னமும் மனதில் வாடாமல் பூத்திருக்கும் உணர்வை மறைக்காமல் பகிர்ந்து கொள்கிறார் ரஜினி காந்த்.
இவரது காதலை அப்படியே பகிர்ந்து கொள்கிறார் பாஷா வில்லன் தேவன்.
“பாஷா படப்பிடிப்பு பம்பாயில்.! பத்து நாட்கள் முடிந்தது.
நான் ஹோட்டலுக்கு வெளியில் நண்பர்களுடன் பேசி முடித்து விட்டு என்னுடைய அறைக்கு சென்றேன். காத்திருந்தது ஒரு சேதி.
“சார் .ரஜினி சார் நாலைந்து தடவை உங்களை போனில் அழைத்து விட்டார்” என்று ரூம் பையன் சொன்னதும் உறைந்து போனேன்.
அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் நம்மை நாலைந்து தடவை அழைத்திருக்கிறாரே? என்னமோ எதோ “எனது மனம் அலையடித்தது. உடனே அவரது அறைக்கு சென்று “சாரி சார்” என்றேன்.
குளித்து முடித்து விட்டு வெள்ளை குர்தா நெற்றியில் திரு நீறு என தெய்வீகமாக இருந்தார் ரஜினி சார்.
“பரவாயில்ல வாங்க தேவன்” என தனது அருகில் அமரச்செய்தார்.
நிறையப் பேசினோம்.நிறைவாகப் பேசினோம். அவரது மனதின் அடித்தளத்தில் தங்கியிருந்த களங்கமற்ற எண்ணங்கள் கரை புரண்டு வந்தன.
அவரது முதல் காதலை சொன்னபோது அந்த மாமனிதனின் தெய்வீகத்தை அறிய முடிந்தது.
அடிமையாகி விட்டேன்.
“மிஸ்டர் தேவன்.! நான் பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தபோது நடந்த ஒரு சம்பவம். சம்பவமா சாசனமா ?தெரியல.
அப்பல்லாம் பஸ்ஸில் பின்பக்கமா ஏறி முன்பக்கமா எறங்கனும். இதுதான் ரூல்ஸ்.
ஒரு நாள் ஒரு பெண் முன் பக்கமாக முண்டியடித்துக் கொண்டு உள்ளே வருவதற்கு முயற்சி பண்ணிக் கொண்டிருந்தாள். நமக்குத்தான் இதெல்லாம் பிடிக்காதே! ரூல்ஸை மீறலாமா?
அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் கடுமையான வாக்கு வாதம். அந்த பொண்ணு ரெகுலரா நான் வேலை பார்க்கிற பஸ்லதான் வரும். போகப்போக எனக்கிருந்த கோபம் போயிரிச்சி.அந்த பொண்ணும் சகஜமாக பேச ஆரம்பிச்சிருச்சி.!அந்த பொண்ணு பேர் நிர்மலா.எம்.பி.பி.எஸ். படிக்கிதுன்னு சொன்னாங்க.
எங்க ரெண்டு பேருக்கும் மத்தியில நல்ல நட்பு. ஒரு நாள் நான் நடிக்கிற டிராமாவ பார்க்கிறதுக்கு வரமுடியுமான்னு கேட்டேன். வந்தாங்க பார்த்தாங்க. நிறைய பாராட்டினாங்க.
இதுக்கு சில நாட்கள் கழிச்சு எனக்கு சென்னை அடையார் இன்ஸ்டிடியூட்ல இருந்து இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்துச்சு.
என்னடா நாம்பதான் ஒன்னும் அனுப்பலியே ,இது எப்படின்னு மனதை போட்டு பிச்சுக்கிட்டிருந்தப்ப நிர்மலா “நான்தான் அனுப்பினேன்”னு சொன்னாங்க. நமக்கு ஷாக். நிம்மியை …நல்லா பழகிட்டதினால இப்படி ஷார்ட்டா கூப்பிடுவேன்.
அப்ப நிம்மி சொன்னாங்க.
“உங்க டிராமா பார்த்த பிறகு உங்களை நிறைய சினிமா போஸ்டர்கள்ல பார்க்கணும்.தியேட்டர்கள்ல கட் அவுட்ஸ் வைக்கிறத பார்க்கணும். இந்தியாவில் நீங்க ஒரு நல்ல நடிகர்ங்கிற பெயர் வாங்கணும் இத நான் பார்க்கணும் .அதனாலதான் நான்தான் உங்க பேர்ல அப்ளிகேஷன் அனுப்பினேன்னு சொன்னாங்க..
இந்த கண்டக்டர் வேலையை விட்டுட்டு என்னம்மா பண்றது?
கவலைப்பட்டதிங்க நான் மாதம்தோறும் பணம் அனுப்பறேன்னு சொல்லி என் கையில 500 ரூபா நோட்டை வச்சாங்க. காதலின் அருமையை உணர்ந்தேன். நான் சென்னைக்கு போறதுக்கு காரணமாக இருந்தது என் நிம்மிதான்.
நான் பெங்களூருக்கு திரும்பி போனபிறகு நிம்மியைத் தேடினேன். எங்கே போனாங்க என்பது தெரியல.குடும்பத்துடன் வேற எங்கேயோ போயிட்டாங்க என்பது மட்டும்தான் தெரிஞ்சது.தேடாத எடமே இல்ல.
நிம்மி என்னை எப்படியெல்லாம் பார்க்கனும்னு ஆசைப்பட்டாங்களோ அது எல்லாமே இப்ப நிறைவேறிடிச்சு.ஆனா என் நிம்மி எங்கே?
நான் அமேரிக்கா போனாலும் இமயமலை போனாலும் எங்கே போனாலும் அங்கெல்லாம் நிம்மியைத் தேடுறேன். என்னுடைய கண்ணில் படவில்லை!” என்று சொல்லியபடியே என்னை கட்டி அணைத்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் கதறியதை என்னால் மறக்க முடியல !
”அவ ஏன் என்னை பார்க்க வரலே.?”-இதத்தான் அடிக்கடி அவர் கேட்டுட்டே இருந்தார்.
காலம்தான் பதில் சொல்லணும்.சொல்லுமா?