படத்தில் காணப்படும் கவிதை வரிகள் இணையத்தில் இருந்து சுட்டது.
இளையராஜாவும் பாரதிராஜாவும் தமிழ்ச் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத நெடிய அத்தியாயங்கள் .
இந்திப் பட பாடல்கள் தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் “அன்னக்கிளி உன்னைத் தேடுதே “என்கிற பாடல் வசிய மந்திரமாக தமிழகம் எங்கும் கேட்டது.
இளையராஜா என்கிற கிராமத்து மனிதர் தமிழ்த் திரை உலகத்தால் கொண்டாடப்பட்டார். அவரது நாற்பதாண்டு இசைப் பயணம் இன்னும் தொடர்கிறது. . “ராக்கம்மா கையத் தட்டு “என்கிற பாடல் மேலைநாட்டவரால் சிறந்த பாடல் என தேர்வு செய்யப்பட்டது. இந்த ஞானியின் கிராமத்து தோழர்தான் பாரதிராஜா.
இயக்குநர் இமயம் என பாராட்டுப் பெறும் பாரதிராஜா தமிழ் மண்ணின் கலாசாரம் சார்ந்த திரைப்படங்களை தந்து மாற்றத்தை ஏற்படுத்தினார். அரங்குகளுக்குள் நடமாடிய சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு சென்றார். பாரதிராஜா, இளையராஜா ,இந்த இரு மேதைகளுடன் வைரமுத்து இணைந்து இசை வேள்வி நடத்தப்பட்டது.
ஒரு காலகட்டத்தில் மூவருமே தனித்தனியாக இயங்க வேண்டிய கட்டாயம். அது அவர்களிடையில் ஏற்பட்ட மாச்சரியங்களால் உருவான பிரிவு.
மதுரையில் நடந்த ‘அன்னக்கொடியும் மதுரைவீரனும் ‘என்கிற படத்தின் தொடக்கவிழாவில் பாரதிராஜா பேசிய பேச்சு இளையராஜாவை புண்படுத்தியதால் இருவரும் பேசுவதை தவிர்த்து பிரிந்தார்கள்.
எட்டு ஆண்டு காலம் முகம் பார்க்க மறுத்தவர்களை தேனி சேர்த்து வைத்திருக்கிறது. வைரமுத்துவையும் சேர்த்து வைக்குமா?
“இயலும் இசையும் இணைந்தது” என இமயம் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தியை பகிர்ந்திருக்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து இன்னும் தனித்தே இருக்கிறார்.
இமயம் அவரை தனது அகத்தில் ஏற்றுக் கொண்டாலும் ஞானியின் ஹார்மோனியம் வைரமுத்துவின் வசிய வரிகளை ஏற்குமா என்பது தெரியவில்லை.
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
இன்னொரு பிரச்னை.
நாற்பதாண்டு காலம் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வந்த ராஜாவின் இசைக்கூடத்தை அகற்றுமாறு பிரசாத் நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது.
அந்த பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார் பாரதிராஜா.