
ஈரடியில் உலகத்தையே அளந்து சொன்னவர் உருவச்சிலை மீது சாணம் வீசி கண்களுக்கு கருப்பு பெயிண்ட் பூசி இருக்கிறார்கள்.
திருவள்ளுவர் மீது என்ன கோபம் என்பது தெரியவில்லை. அற இலக்கிய முன்னோடியானவர் அய்யன் வள்ளுவர்.
அவரது குறளில் எவரையும் காயப்படுத்தவில்லை. எந்த மதத்தையும் சாடவில்லை. அறத்தை முன்னிறுத்தி ஈரடிகளில் கருத்துகளை சொன்னார். உலக அறிஞர் பெருமக்கள் திருக்குறளை மதிக்கிறார்கள். வணங்குகிறார்கள்.
ஆனால் தஞ்சசையில் உள்ள பிள்ளையார்பட்டியில் யாரோ எவரோ எந்த அமைப்பினரோ வள்ளுவரை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது நல்லதல்ல.!
“மதுரையில் இருந்த சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்ற எடுத்துச் செல்லும்போது சிலர் கீழ் அறையில் இருந்து கொண்டு மூல நூலாசிரியர் அரங்கேற்றம் செய்யச் செய்ய,ஓலையில் எழுதி அரங்கேற்றம் முடியும் தருவாயில் வெளிவந்து இப்பாடல்கள் முன்பே சங்கத்தில் உள்ளன என்று தெரிவித்தனர், திருவள்ளுவர் எழுதிச் சென்ற ‘ஊசி முனை ‘எனும் நூலை அவ்வாறு எழுத முடியாது.தோல்வியுற்றனர்.திருவள்ளுவர் வென்று நின்றபோது மதுரைச்சங்கமே அழிந்தது என வரலாறு கூறுகிறது.-“—- க.ப. அறவாணனின் ‘அற இலக்கியக் களஞ்சியம்’ என்கிற ஆய்வு நூலில் காணப்படுகிறது.
ஆக சதிகாரர்கள் அன்றே தமிழுக்கு எதிராக இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
அந்த சதிகாரர்களின் வித்துக்களின் வளர்ச்சிதான் தஞ்சையில் சாண உருவில் வெளியாகி இருக்கிறது.
“தமிழர்கள் எண்ணியது கோடி,
பேசியது இலட்சம்
எழுதியது ஆயிரம்
அச்சிட்டது நூறு.
பின்பற்றியது பூச்சியம்” —- இதுவும் அறவாணன் சொன்னதுதான். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்.












