“திராவிடமாவது இந்துவாவது நாங்க தமிழன்டா!” என முழங்கி இருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.. புதுப்பார்வையாக இருக்கிறது.
கீழடி நாகரீகம் தெரியாமல் இருந்தது வரை திராவிடம் பேசியவர்தான் நம்ம ராஜா.
ஆனால் இன்னமும் இவர் முழுமையாக தமிழர் பற்றி தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.
ஆளும் கட்சியின் அரவணைப்பு வேண்டும் என்பதற்காக இன்று பாராட்டு கிற அவர் இந்திய அளவில் தமிழர் கலாசாரம் மீது நடக்கிற ஆக்கிரமிப்பு பற்றி கவலைப்பட்டாரில்லை.
சிந்து நதிக்கரை நாகரீகம் கண்டெடுத்த ஆதாரங்களில் காளை சின்னத்தை குதிரையாக மாற்றுகிற ஒரு முயற்சி நடந்ததே அது பற்றி ராஜாவுக்கு தெரியுமா?
காளை தமிழனின் அடையாளம் .குதிரை கணவாய் வழியாக வந்தவனின் அடையாளம் ஆனால் அதையும் அசுவம் என சொல்லி அதற்கு இந்து என்கிற பொய்யான முத்திரையைக் குத்த பார்த்தார்கள்.
தற்போது திருவள்ளுவனையும் இந்து என்கிற மதக் குறியீட்டுக்குள் கொண்டு வரப் பார்க்கிறார்கள். இது திட்டமிட்ட சதி. தமிழகத்துக்குள் காவி படர நினைக்கிறது. அது இன உணர்வை அழித்துவிடும் வைரஸ் .
அதற்கு சிலர் துணை போகிறார்கள் என்பது ராஜாவுக்கு தெரியும். கீழடி நாகரிக குறிப்புகள் வெளி வந்து விடக்கூடாது என்பதற்காக அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள் யார் என்பது இமயத்துக்கு தெரியாதா என்ன?
இனி வருவது தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா வாசித்தளித்துள்ள பாராட்டு பாத்திரம்.
“சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம்.,அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி!
இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,
சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.
அந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.
தமிழரின் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,”ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். அதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாரதி ராஜா அறிக்கையில் கூறி இருக்கிறார்.
.