
லைகாவும் மணிரத்னமும் இணைந்து தயாரிக்கிற படம்தான் ‘பொன்னியின் செல்வன்’
அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்து இயக்குவதாக ஆசைப்பட்ட படம் அமரர் கல்கியின் பொன்னியின்செல்வன் பெரு நாவல்.
பிரமிக்க வைக்கும் பாத்திரப்படைப்பு.அதற்காக அமரர் மணியம் போட்டிருந்த சித்திரங்கள் இன்னமும் அழியாத கோலம். கல்வெட்டு மாதிரி அமைந்து விட்டது.
அந்த காலத்தில் ‘காதல்’என்கிற வார இதழில் அரு .ராமநாதன் என்பவர் ‘வீரபாண்டியன் மனைவி’ என்கிற நெடு நாவலை எழுதினார். இவரும் தமிழ்த் திரை உலகில் பிரபலமாக இருந்தவர்தான். பொன்னியின் செல்வன்,வீரபாண்டியன் மனைவி இரண்டுமே விரும்பிப் படிக்கப்பட்டவைதான். என்றாலும் ராமநாதனுக்கு பெயர் வாங்கித்தந்தது ராஜராஜசோழன் நாடகம்தான்.. டிகே எஸ்.சகோதரர்கள் நடித்த அற்புதமான நாடகம். நாடகம் பெற்றுத்தந்த பெருமையை சினிமா பெறவில்லை என்பது ஏமாற்றம்தான். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
கல்கி,அரு .ராமநாதன் இருவருடைய நெடு நாவல்களில் தற்போது படப்பிடிப்பில் இருப்பது பொன்னியின் செல்வன் மட்டுமே!
மணிரத்னம் இயக்கிவருகிற அந்தப்படத்தைப் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த கதாபாத்திரங்களுக்கான ஆடைகள் மும்பையில் வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. கதையின் நாயகர்களாக தேர்வு செய்யப்படடவர்கள் சென்னை மெட்றாஸ் டாக்கீஸ் (மணிரத்னம் )அலுவலகம் சென்று அந்த ஆடைகளை போட்டுப் பார்த்து திருத்தம் சொல்லியிருக்கிறார்கள். அதாவது சைஸ் பற்றிய விவரத்தை மட்டுமே.!
போட்டோ ஷூட் நடத்தியதாக தெரியவில்லை. எல்லாமே படப்பிடிப்பில் நடந்து விடுகின்றன. எந்த ஒரு தகவலும் படமும் வெளியில் போய் விடக்கூடாது என்பதில் மணிரத்னம் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார். கால்ஷீட் விஷயத்திலும் கணக்குப் போட்டுத்தான் கலைஞர்களிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.












