ரயில் கட்டண உயர்வு மற்றும் எரிவாயு உருளையின் விலை உயர்வு ஆகியவை புத்தாண்டிலேயே மக்களைத் தாக்கிய நிலையில், அடுத்த விலையேற்றத்தை அறிவிக்க உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
பணவீக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கச்சாப் பொருட்களின் விலையேற்றம், நுகர்வு குறைவு போன்ற காரணங்களால் தங்களது உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதுவும் இந்த ஜனவரி மாதத்திலேயே இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது.
நெஸ்ட்லே, ஐடிசி, பிரிட்டானியா போன்ற உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், செலவு அதிகரித்து, லாபம் குறைந்ததால், தவிர்க்க முடியாத நிலையில், தங்களது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்று முடிவெடுத்துள்ளன.
பால் மற்றும் எண்ணெய், கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதால், ஒன்று விலையை உயர்த்துவது அல்லது பேக்கின் அளவைக் குறைப்பது என்று ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
பொதுவாகவே விலையேற்றத்தை பெரும்பாலும் நாங்கள் அமல்படுத்துவதில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில், அதனை நாங்கள் செயல்படுத்தியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நெஸ்ட்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 7-12 சதவீத விலை உயர்வை அறிவிப்பது குறித்து ரொட்டித் தயாரிப்பு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.